ந.லோகதயாளன்.
இலங்கை அரசு வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் நடவடிக்கையினால் மிகப் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக சீனா இறுதித் தீர்மானத்தை அறிவிக்காத நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இலங்கை நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது .
இலங்கையின் முன்னணிக் கடன் வழங்குநரான சீனாவுக்கு சுமார் 7.4 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை செலுத்தவேண்டியுள்ளது.
இலங்கையின் ஏனைய பிரதான கடன் வழங்குநர்களான இந்தியா. ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் ஒன்றிணைந்து செயற்பட இணக்கம் தெரிவிக்கின்றபோதும் சீனா மட்டும் இதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றது.
இதன் காரணமாக இலங்கையின் கடன் மறு சீரமைப்பு விடயத்தை நடைமுறைப்படுத்த எடுத்த பல முயற்சிகளிலும் இணைவதற்கு சீனா மறுத்து வருகின்றது.
இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பரிஸ் கிளப்
ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த புதிய நடவடிக்கைகளில் சீனா கண்காணிப்பாளராக மட்டுமே உள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை அரசிற்கு கடன் வழங்குநர்களுடனான பொறிமுறை ஒன்றின் கீழ் இணக்கப்பாட்டுக்கு வருவதில் சீனா இன்னமும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
சீனாவின் இந்த இறுக்கமான போக்கு இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது என்றே கூறப்படுகின்றது.
இந்த நெருக்கடி நிலவும் காலத்தில்த்தான் இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட குழுவினர் அண்மையில் சீனாவிற்கு நேரில் சென்று
கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆனாலும் சீனா கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக ஏதும் பிடிகொடுத்துப் பேசாது அதற்குப் பதிலாக கடன் முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்களையே முன்னெடுத்தாகவே தெரிய வருகின்றது.
இவற்றி்ன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத் தின் அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கும், 27ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு வரவுள்ள சூழல் இலங்கைக்கு எவ்வாறு அமையவுள்ளது என்பதே தற்போது கொழும்பின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இந்தக் குழுவின் பயணத்தின்போது இடம்பெறவுள்ள முதலாவது மதிப்பாய்வுக் கூட்டத்தில் கடந்த ஜூன் மாத இறுதி வரையான விரிவாக்க நிதி வசதித் திட்டத்தின் செயற் திறன் தொடர்பாகப் பரிசீலிக்கப்படவுள்ளதாக நம்பப்படுகின்றது.
விரிவாக்க நிதி வசதித் திட்டத்தின் செயற்றிறன் அந்தக் குழுவாலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையாலும் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே சுமார் 350 மில்லியன் டொலர் நிதி உதவியானது இலங்கைக் நாண்டிற்குக் கிடைக்கும்.
இது சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையால் கடந்த மார்ச் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த 2.9 பில்லியன் டொலரின் ஒரு பகுதியாகும். ஆயினும் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் இந்த உதவி கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கம் தற்போது இலங்கை அரசிற்கு உள்ளது. இதில் அதிக பட்சமாக உதவியானது கிடைக்காமல்
போவதற்கான சந்தர்ப்பமே அதிகமாக உள்ளதாகவே பேசப்படுவதன் காரணமாகவே சீனாவை எந்த வகையிலேனும் கடன் மறு சீரமைப்பிற்கு இணங்க வைக்க இலங்கை அரசு முயல்கின்றது.
இதற்காக இலங்கை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் என்ன விலையை கொடுத்தேனும் அந்த ஒப்புதலைப் பெற்றுவிடத் துடிக்கின்றது. இதன் காரணமாகவே இலங்கை அரசு மிகப் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.