Home » சீன ஆதிக்கத்துக்கு யாழ். பல்கலைக் கழகம் கடும்  கண்டனம்.

சீன ஆதிக்கத்துக்கு யாழ். பல்கலைக் கழகம் கடும்  கண்டனம்.

Source

ந.லோகதயாளன்.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர், இலங்கையில் தமிழ் சமூகம் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட  தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டமையை  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாகிகள்  நேற்று பல்கலைக்கழக ஒன்றிய அலுவலகத்தில் தாம் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் இதனை அறிவித்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு யுத்தத்தின் போது தமிழர்கள் அனுபவித்த துன்பங்களை சீனா நன்கு அறிந்திருக்கிறது.

 ஐ.நா. சபையின் அறிக்கையின் பிரகாரம், இனவழிப்பு யுத்தத்தின் இறுதி ஆறு மாத காலப் பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டமையோடு நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களும் சிறுமிகளும் சிறிலங்கா ஆயுத படையினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். 

29 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார அலுவலகத்தின்படி, 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் போர் விதவைகள் தமிழர் பகுதிகளில் ஏராளமான துன்பங்களை தொடர்ச்சியாக எதிர் கொண்டு வருகின்றனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இலட்சக்கணக்கான சிறிலங்கா படையினர் எமது தாயக பூமியை ஆக்கிரமித்து நிற்கின்றனர்.

யுத்தத்தின் பின்னர் எமது பாரம்பரிய தாயகத்தில் எம்மை சிறுபான்மை ஆக்குவதற்காக சிங்கள, பௌத்த மக்களை குடியேற்றுவதற்கு எமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது.

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துவதன் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதியைப் பெறுவதே எமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. நேற்றைய தினம்தான் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் நாம் கூட்டாக இணைந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்தும் கடிதத்தை தமிழர்கள் ஐக்கியமாக அனுப்பிய அதே நாளில், சீனத் தூதுவர் ஐ.நா “. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக டுவீட் செய்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா, ஜேர்மனி உட்பட பல நாடுகள் தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் நிலையில் சீனத் தூதரகத்தின் குறித்த கருத்தானது இலங்கையில் தமது ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்கு இலங்கை அரசை போற்றுவதாக அமைகிறது.  தமிழ் மக்கள் விரோத மனப்பான்மை கொண்டுள்ள சீனாவின் ஆதிக்கம் வடக்கு கிழக்கில்  அதிகரித்து வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்ட தமிழராகிய நாம் சீன தூதுவரின் பொறுப்பற்ற இந்த டுவீட் குறித்து நாங்கள் மிகவும் வேதனையடைவதுடன் இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இச்செய்கையானது “மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்தது போல்” உள்ளது.     

ஆகவே இலங்கைக்கான சீன தூதரகம் தாங்கள் டுவிட்டரில் வெளியிட்ட உள்ளடக்கத்தை திரும்பப் பெறுமாறு சீனத் தூதரை நாங்கள் வலியுறுத்துவதுடன், மேலும் வரவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் எங்கள் அழைப்பை ஆதரிக்குமாறும்  அவரை வலியுறுத்துகிறோம்.

சீனத் தூதுவர் தமிழ்ப் பகுதிகளுக்குச் சென்று நேர்மையுடன் உதவிகளை வழங்கினாரா எனக் கேள்வி எழுப்புகின்றோம். நல்லூர் முருகன் கோவிலுக்கு நீங்கள் தமிழர் பாரம்பரிய உடையுடுத்தி வருகை தந்தது தமிழர்களை ஏமாற்றும் செயலா என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

நீங்கள் ஒரு பொறுப்புள்ள நாடாகச் செயற்படுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் எங்கள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க வேண்டாம் என்றும், எங்கள் துன்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மீண்டும் ஒருமுறை, யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியமாக நாங்கள் சீனத் தூதரின் டுவீட்டை மீளப்பெறுமாறும் பெறுமாறும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரப்படுத்துவத்துக்கான எங்களின் அழைப்பை ஆதரிக்குமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தமிழர்களைக் கொன்றவர்கள் மற்றும் தமிழ்ப் பெண்களை பலாத்காரம் செய்தவர்களையும் ஆதரிக்கக் கூடாது என வலியுறுத்துவதோடு ஐ.நா. வில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் நேச நாடுகளை திசை திருப்ப முயலக் கூடாது எனவும் வலியுறுத்துகிறோம். – என்று தெரிவித்தனர்.
TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image