அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளை அமுல்படுத்தும் போது, கடுமையான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பீடிகளுக்கு விதிக்கப்பட்ட வரி காரணமாக தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், பீடி என்பது மதுபானம் மற்றும் புகையிலை தொழில் வகையைச் சேர்ந்த ஒரு தொழிலாகும். ஆரோக்கியமற்ற தொழில்களை ஊக்குவிக்க அரசாங்கம் செயற்பட மாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சிகள் நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார். உணவுப் பணவீக்கம் 90 சதவீதமாக உள்ள நிலையில், மதுபானம் மற்றும் சிகரெட்டின் விலை 30 சதவீதமாக உள்ளதாக எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. சுமார் 760 பதிவு செய்யப்பட்ட பீடி உற்பத்தியாளர்கள் உள்ளனர். பீடி ஒன்றுக்கு இரண்டு ரூபா வரி விதிப்பதற்கு பதிலாக, வருடாந்த உரிமக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. வரி அறிவிடும் முறை குறித்து கலால் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.