ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி குறித்து பாராளுமன்றத்தில் முன்வைத்த நிகழ்ச்சித்திட்டம் பற்றி எதிர்வரும் 25ம் திகதி முதல் விவாதிக்கப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி அலுவலக பணியாளர்கள் குழாம் தலைமை அதிகாரியுமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது அரசியல் கட்சிகள் நாட்டுக்கு ஆதரவு வழங்க வேண்டுமா? இல்லையா? எனத் தீர்மானிக்க சந்தர்ப்பம் கிட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
பொருளாதார முன்னேற்றம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான கட்டமைக்கப்பட்ட மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் அங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்த திட்டம் நிதி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல. இலங்கையின் நிலையான அபிவிருத்திக்குரிய விடயங்களும் இதில் உள்ளடங்குவதாக சாகல ரத்னாயக்க சுட்டிக்காட்டினார். வரிக் கொள்கையை உள்ளடக்கிய வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அரச மூலதண ஒருமைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தத் திட்டம் துணையுரியும். 2025ம் ஆண்டளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு இடையிலான விகிதம் 14 சதவீதமாகும். இந்த இலக்கை அடைந்து கொள்ள முடியும் என அவர் நம்பிக்ளை வெளியிட்டார்.