ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் என கூறி சமூக ஊடகங்களில் வலம் வரும் கடிதம் பொய்யானது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் இலங்கைக்கான சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சபாநாயகர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி, அனைத்து சட்ட விடயங்களையும் நிறைவு செய்ததன் பின்னர் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூருக்கு பிரவேசிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுமதி வழங்கப்பட்டதை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் அவர் புகலிடம் கோரவில்லை என்றும் அவருக்கு எந்தப் புகலிடமும் வழங்கப்படவில்லை என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடி பாராளுமன்றத்தின் ஊடாக உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என சங்கைக்குரிய ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தான் கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நெருக்கடி ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிவதும், போராட்டக்காரர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதும் முக்கியமாகும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமைதியான மற்றும் ஜனநாயக முறையிலான மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் கேட்டுக் கொள்வதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற அலுவலர்களுக்கான நிறைவேற்றுக் குழுவின் விசேட கூட்டம் ஒன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
