Home » “ஜி எஸ் பி + வரிச்சலுமையை இலங்கை இழக்க நேரிடும்” ஜெர்மனி எச்சரிக்கை

“ஜி எஸ் பி + வரிச்சலுமையை இலங்கை இழக்க நேரிடும்” ஜெர்மனி எச்சரிக்கை

Source
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமல் இருக்கும் காரணத்தால் நாட்டிற்கு கணிசமான அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஜி எஸ் பி + வரிச் சலுகையை இலங்கை இழக்க நேரிடும் என்று ஜெர்மனியத் தூதர் எச்சரித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மனித உரிமை மீறல்கள், போர்க்காலங்களில் நடைபெற்ற சட்டவிரோதச் செயல்கள் ஆகியவை தொடர்பில் உரிய விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை முன்னெடுக்காமல் இருப்பது சர்வதேச சமூகம் மற்றும் ஐ நா போன்ற அமைப்புகளை கடும் அதிருப்திகளுக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் கொழும்பிற்கான ஜெர்மனியத் தூதர் ஹொல்கர் சியூபர்ட் இலங்கை ஜி எஸ் பி + வரிச்சலுகையையும் இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில செய்தியாளர்களை இம்மாதம் 18ஆம் திகதி அவர் சந்தித்தபோதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பல முறை உத்தரவாதம் அளித்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமல் இலங்கை சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜி எஸ் பி + வரிச்சலுகை மூலம் இலங்கையால் சுலபமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடிகிறது. அதன் மூலம் நாட்டிற்கு கணிசமான அளவிற்கு அந்நியச் செலாவணியும் அதன் மூலம் மிகவும் தேவைப்படும் டொலர்களும் கிட்டுகின்றன. பயங்கரவாத தடைச் சட்டத்தை அளித்த வாக்குறுதிகளிற்கு மாறாக இலங்கை நீக்காமல் இருப்பதால் அந்த வரிச்சலுகையை இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார். இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்று இந்த ஆண்டின் முற்பகுதியில் வெளியாகும் என்றும், அதில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு ஜி எஸ் பி + மூலமான வரிச்சலுகையைப் பெறுவது தொடர்பில் இலங்கை அளித்த வாக்குறுதிகளின்படி செய்துள்ள முன்னேற்றங்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் அர்ஸலா வொன் டெட் லெயன் கூறியிருந்தார். ஜி எஸ் பி + வரிச்சலுகை இலங்கைக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டுமாயின், அவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் காத்திரமாக இலங்கையை கோரியிருந்தது. அந்த சட்டத்தின் மூலம் பயங்கரவாதத்துடன் தொடர்பில் இருந்தனர் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் ஏராளமானவர்களை கைது செய்த இலங்கை அரசு அவர்கள் மீது வழக்குகள் ஏதும் பதியாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைத்து வைத்துள்ளது ஐ நா உட்பட பன்னாட்டுச் சமூகத்தின் கண்டத்திற்கு வழிவகுத்தது. அதேவேளை இந்த சட்டம் அரசிற்கு எதிரான கருத்துக்களை கூறுபவர்களை ஒடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்றும் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவ்விதமான பொறுப்புக்கூறலும் இதுவரை இல்லை என்பதையும் ஐரோப்பிய ஒன்றியம் பல முறை இலங்கை அரசிற்கு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்கள் மற்றும் தகுதிகளிற்கு அமைவாக பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றி அமைக்கவோ அல்லது அதை முற்றாக நீக்கவோ இலங்கை பல முறை எமக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த தவணைக்கான ஜி எஸ் பி + வரிச்சலுகை முடிவிற்கு வருகிறது. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் அந்த சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் உள்ளது. நாடு தற்போதுள்ள சூழலில் அதை இழக்கும் நிலையில் இல்லை என்று ஜெர்மனியத் தூதர் ஹொல்கர் சியூபர்ட் கூறியுள்ளார். கொடூரமான அந்த சட்டத்தின் கீழ் எந்த சட்ட வழிமுறைகளும் இன்றி மூன்று மாதங்கள் வரை யாரை வேண்டுமானாலும் தடுத்து வைக்க வழி இருப்பதால் அதை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாகக் கோரி வருகிறது. ஆனால் மாதங்கள் மட்டுமல்ல வருடக் கணக்கில் இந்த சட்டத்தின் கீழ் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மையினர் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியாக இலங்கை அரசிற்கு கூறி வந்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டமானது கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் காலவரையின்றி சிறையில் அடைத்து வைக்க வழி செய்கிறது எனவே அது பாரிய மனித உரிமைகள் மீறலாகும், ஆகவே அப்படியான சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளது. அதேவேளை அந்த சட்டத்தை நீக்க இலங்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கைக்கான ஜி எஸ் பி + வரிச்சலுகையை ரத்துச் செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தீர்மானமும் இயற்றியுள்ளது. எனினும் அதை நடைமுறைபடுத்துவது அந்த ஒன்றியத்திலுள்ள நாடுகளால் முடிவு செய்யப்படும் என்று அந்த தீர்மானம் கூறினாலும், பெரும்பாலும் அப்படியான தீர்மானங்கள் ஒருமனதாகவே நிறைவேற்றப்படுவது வழமை. போர்க்காலம் மற்றும் அதற்கு பின்னர் தாமே இந்தச் சட்டத்தின் மூலம் குறி வைக்கப்படுவதாகக் கூறி முன்னர் நாட்டில் சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மட்டுமே இதை நீக்க வேண்டும் என்று கோரிவந்தனர். ஆனால் இப்போது பெரும்பான்மையின சிங்கள மக்களிடமிருந்தும் அந்த அழுத்தம் வருகிறது. அரசிற்கு எதிராக மாணவர் தலைவர்கள் போராடிய போது, பௌத்த பிக்கு ஒருவர் உட்பட பலர் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அரசிற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய குற்றச்சாட்டிற்கு ஆளான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதை பரந்துபட்ட அளவில் பயன்படுத்தி பலரை சிறையில் அடைத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறார். நேரடியாக மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படாமல், நாடாளுமன்றத்தின் மூலம் அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராகவும் ஆரப்பாட்டங்கள் கடந்த ஆண்டு கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்றன. அந்த போராட்டம் முதலில் அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராகத் தொடங்கி அவர் ஆட்சியிலிருந்து விலகி நாட்டைவிட்டே ஓடும் நிலையை ஏற்படுத்தியது. ராஜபக்சக்களிற்கு எதிராகப் போராட்டத்தை நடத்தியவர்களிற்கு ரணில் விக்ரமசிங்க ஆதரவளித்தார். எனினும் அவர் ஜனாதிபதியாக பதவியேற்று 24 மணி நேரங்களிற்குள் போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தார். பாதுகாப்பு படைகளைப் பயன்படுத்தி போராடியவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்து, பலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதையெல்லாம் சர்வதேச சமூகம் அண்மையில் தமது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியிருந்தது. பயங்கரவாத தடைச் சட்டம் மட்டுமின்றி, போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதே தரத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பொறுப்புகூறல் நடைபெற வேண்டும் என்று ஐ நா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பன்னாட்டுச் சமூகம் இலங்கைக்கு தெரிவித்திருந்தது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு நிதியுதவி அளிக்க பயங்கரவாத தடைச் சட்டமும், பொறுப்புக்கூறல் இன்மையும் பெரிய தடையாக இருந்து வருகிறது. சர்வதேச நாணய நிதியம் உட்பட நிதியுதவி வழங்கும் அமைப்புகள் இலங்கை போர்க்கால சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறலை முன்னெடுத்து தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்த நடவடிக்கை எடுக்கப்படாத வரை தாங்கள் நிதியுதவி அளிப்பது சாத்தியப்படாது என்றும் அவர் கூறியுள்ளன. இப்படியான சூழலில் இலங்கை ஜி எஸ் பி + வரிச்சலுகையையும் இழக்கும் நிலை ஏற்பட்டால் அது பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பரந்துபட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் ஒன்றை இயற்றபோவதாக அரசு கூறி வருகிறது என்றாலும் அது தொடர்பில் இதுவரை எந்த முன்னெடுப்பும் இடம்பெறவில்லை. TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image