உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதன்போது அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தமது யோசனைகளை முன்வைத்தனர். இதன்படி ஏப்பிரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆகையினால் பொருத்தமான திகதியை அறிவித்து தேர்தலினை பிற்போடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.
தேர்தலை பிற்போடுவதனால் சட்டச் சிக்கல் நிலவுவதாகவும் இந்த பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு தேர்தலுக்கான சட்ட ஏற்பாடுகள் பற்றி ஆராய்ந்து தேர்தல் நடத்துவதற்கான திகதி பற்றி தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். இதன்படி உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் இடம்பெறாது. எதிர்வரும் 28ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரையும், ஏப்பிரல் மாதம் 3ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.