எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்கள் பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்களை சமர்ப்பிக்க முடியும்.
அத்துடன், சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் தேர்தல் ஆணையகம் வழங்கிய சிறப்பு அடையாள அட்டை என்பனவும் அதற்காக பயன்படுத்த முடியும். இந்த ஆவணங்களைத் தவிர, வேறு எந்த ஆவணமும், வாக்குச் சாவடியில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்தல் ஆணையகத்தினால் வழங்கப்படும் விசேட அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி அடுத்த மாதம் 2ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளிப்பு குறிப்பிடப்பட்டவாறு பெப்ரவரி மாதம் 22ஆம், 23ஆம், 24ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. தபால்மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவுறுத்தல் பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. தபால் வாக்களிக்கத் தவறிய வாக்காளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி தங்களது வாக்குகளை பதிவு செய்து கொள்ள முடியும்.