இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் வடக்கு மாகாண மீனவர் அமைப்புக்களிற்கு வழங்க நடவடிக்கை இடம்பெறுகின்றது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சில வடக்கு மாகாண மீனவர் அமைப்புக்களிற்கு வழங்கி தமிழக மீனவர்களின் ஊடுருவலைக் கண்காணித்தல் மற்றும் மாவட்டத்தில் இடம்பெறும் அனர்த நடவடிக்கைகளின்போது தற்காப்பு நடவடிக்கைகளின் பயன்பாடுகளிற்கு உபயோகிக்கும் வகையில் கையளிக்கப்படுகின்றது.
இவ்வாறு கையளிக்கப்படும் படகுகளை மாவட்ட மீனவ அமைப்புக்கள் மயிலிட்டி இறங்குதுறைக்கு வருகை தந்து பார்வையிட்டு அவற்றின் தரம் தொடர்பில் பரிசோதனையில் ஈடுபட்டதோடு இயக்கியும் பரிசோதித்துள்ளனர்.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தின் சம்மேளனம் மற்றும் பருத்தித்துறை முனைச் சங்கம் ஆகியவற்றுடன் மன்னார் மாவட்ட சமாசத்திற்கும் ஓர் விசைப்படகு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட சமயம் கிளிநொச்சி மாவட்டத்தின் சங்கப் பிரதிநிதிகள் சமூகமளிக்காத காரணத்தினால் இதுவரை கையளிக்கப்படவில்லை.
இதேநேரம் இவ்வாறு வழங்கப்பட்ட படகுகளும் தரிப்பிட வசதி ஏற்பாடு காரணமாக இதுவரை எடுத்துச் செல்லப்படாது மயிலிட்டித் துறைமுகத்திலேயே தரித்து நிற்கும் நிலையில் இவை விரைவில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
TL