Home » தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அரசு கரிசனை – நீதி அமைச்சர்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அரசு கரிசனை – நீதி அமைச்சர்!

Source

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசு மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு வருகின்றது. அது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு பரிந்துரைகள் பலவற்றையும் வழங்கியுள்ளது. அந்தப் பரிந்துரைகளை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டுப் பொறிமுறை ஊடாகவே அரசு தீர்வு காணும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் புலம்பெயர் அமைப்புக்களின் தலைவர்களுடன் பேச்சு ஆரம்பமாகின்றது என்றும், அந்தப் பேச்சு வெற்றிபெறுமானால் இலங்கை மீது சர்வதேசத்தின் தலையீடு காணப்படாது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக சர்வதேச நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ் உள்நாட்டு தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

எனினும், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கையே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் உள்நாட்டுப் பொறிமுறையொன்றின் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் தீர்வுக்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் பெறுபேறுகள் கிடைக்கும் பட்சத்தில் அதற்கான சர்வதேசத்தின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக நிதி அமைச்சின் கீழ் மூன்று அலுவலகங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமும் அதில் உள்ளடங்குகின்றது. அந்த அலுவலகத்திலுள்ள 7 ஆயிரம் கோவைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் 65 கோவைகள் மாத்திரமே விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

எமது நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்துவதற்கு இத்தகைய தாமதங்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

கடந்த மூன்று மாத காலங்களில் நாம் 1,800 கோவைகளை விசாரணை செய்திருக்கின்றோம். அதற்கிணங்க அடுத்த வருட இறுதிக்குள் அனைத்துக் கோவைகளையும் விசாரணை செய்து முடிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அந்த விசாரணைகள் முடிவடைந்ததும் அந்த விடயங்களை இழப்பீட்டுக்கான அலுவலகமே கையாளவுள்ளது.

அரசானது அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை இரண்டு இலட்சமாக அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. கடந்த அமைச்சரவையில் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது” – என்றார்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image