தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை விநியோகிக்கும் விற்பனை நிலையங்களை சோதமனையிட்டு அவ்வாறானவர்களின் விற்பனை உரிமையை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள ஒரு குழுவினர் தரக்குறைவான பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை அதிக விலைக்கு விற்பனை செய்து விவசாயிகளின் பணத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தரமற்ற இரசாயனங்களால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பக்கற்றுகளில் காட்டப்பட்டுள்ள விலையைத் தவிர மேலதிக விலையை வசூலிக்க ஒருவருக்கும் அனுமதியில்லை.
விற்பனை முகவர் உரிய விலையை விட அதிகமாக வசூலித்தால், விவசாயிகள் நுகர்வோர் பாதுகாப்பு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யலாம்.
இது தொடர்பான சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
