தற்போதைய நிலையில் நாட்டிற்குத் தேவையான அளவு டீசல் தொகை கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

தற்போதைய நிலையில் நாட்டிற்குத் தேவையான அளவு டீசல் தொகை கையிருப்பில் இருப்பதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் நாளாந்த டீசல் தேவைப்பாடு சுமார் ஐயாயிரம் மெட்ரிக் தென்னாகும். ஆறாயிரம் மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனினும் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
எதிர்வரும் 23ம், 24ம் திகதிகளில் பெற்றோலை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. அதற்கான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 3, 4 தினங்களுக்குள் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் பெற்றோலை வழங்க முடியுமென கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்கு மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இவற்றுக்கான எரிபொருளை ஏற்றிய கப்பல்கள் 29ம் திகதியும் ஜுலை மாதம் 10ம் மற்றும் 14ம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை அளிப்பதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இணக்கம் வெளியிட்டிருப்பதாக கல்வியமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.
காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும் பிற்பகல் 5 மணியில் இருந்து 6 மணி வரையிலும் அவர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
