இலங்கையின் தற்போதைய வரிக்கொள்கை நாட்டை மீட்கும் நடவடிக்கையாகும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது வழமையான வரிக்கொள்கை அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தச் செயற்பாடுகள் சீர்குலையுமாயின் இலங்கைக்கு எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். கடந்த வருட இறுதியில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தினை இவ்வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டமாகக் கருதமுடியாது என்றும் அவர் கூறினார். இது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியாகும் என்றும் அவர் கூறினார்.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் ஆராய்ச்சிப் பணியகம் ஒழுங்கு செய்திருந்த வரிக் கொள்கை பற்றிய கலந்துரையாடலின் போது ஜனாதிபதி கருத்து வெளியிட்டார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தைத் தவிர வேறு அமைப்புக்களோ தனிநபர்களோ சர்வதேச நாணய நிதியத்திற்கான யோசனைகளை முன்வைக்கவில்லை. நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி கூறினார். சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எடுக்கப்பட்டதும் அது பற்றிய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இதனை நிறைவேற்றும் அல்து நிராகரிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க பரிஸ் சமூகம் என்ற அமைப்பு முன்வந்துள்ளது. புதிய வரி முறைமையினால் சிலருக்கு சிரமங்கள் ஏற்படலாம். தற்போதைய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களினால் சர்வதேச நாணய நிதியம் உட்பட ஏனைய நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலங்கைப் பொருளாதார நிலமையை வழமைக்குக் கொண்டுவர முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எதிர்வரும் இரண்டு மாதங்கள் சிரமமான காலப்பகுதியாக இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.