திருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்பாக தாய்லாந்திலிருந்து வரும் பிக்குகளால் 4 அடி புத்தர் சிலை நேற்று நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதும் எதிர்ப்புக்களையடுத்து அது கைவிடப்பட்டது. இருப்பினும் போராட்டக்காரர்கள் அந்த இடத்திலிருந்து அகன்ற பின்னர் பிக்குகள் தலைமையில் வந்த சுமார் 500 பேர் புத்தர் சிலை வைக்க இருந்த இடத்தில் வழிபாடுகள் நடத்தினர்.
270 ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்திலிருந்து திருகோணமலைக்கு வந்து இறங்கியதாகக் கூறப்படும் பிக்குகளை நினைவுகூரும் முகமாகவும், அவர்களை கௌரவப்படுத்தும் முகமாகவும் அவர்கள் வந்து இறங்கியதாக மகாவம்சத்தில் கூறப்படும் திருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் 4 அடி உயரமான புத்தர் சிலை தாய்லாந்திலிருந்து வரும் பிக்குகளால் வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து புத்தர் சிலை வைக்க திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் தமிழ்த் தேசியப் பேரவையால் நேற்றுமுன்தினம் காலை முதல் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், புத்தர் சிலை வைப்பதால் இனமுறுகல் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டி திருகோணமலை மாவட்டச் செயலருக்குக் கடிதம் அனுப்பினார். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புக்கு அமைவாக, புத்தர் சிலை வைக்கும் நிகழ்வை இடமாற்றுமாறு மாவட்டச் செயலருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலை வைக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை மாவட்டச் செயலர் நேற்றுக் காலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து புத்தர் சிலை நிறுவுவதற்காகத் திட்டமிடப்பட்ட நேரம் வரையில் அங்கிருந்துவிட்டு போராட்டக்காரர்கள் வெளியேறினர்.
இதற்கிடையில், திருகோணமலை மணிக்கூட்டுக்கோபுரத்தின் அருகில் நேற்றுக்காலை ஒன்றுகூடிய சிங்கள மக்கள் பிக்குகள் தலைமை தாங்க ஊர்வலமாக வந்து நெல்சன் தியேட்டருக்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டு மூடப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சமய அனுட்டானங்களை மேற்கொண்டனர். இதனால் திருகோணமலை நகரப்பகுதியில் பதற்ற நிலை உருவாகியது.
பொலிஸார் வந்தவர்களைத் தடுக்க முற்பட்டபோதிலும் அது முடியாமற்போன நிலையில் அத்துமீறியவர்கள் வளவுக்குள் புகுந்து வழிபாட்டில் ஈடுபட்டனர். அதன்பின் அவ்வித்தில் விசேட இராணுவப்பிரிவினர் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.