உள்ளூராட்சித் தேர்தல் திகதியைத் தீர்மானிப்பது தொடர்பான கலந்துரையாடலுக்கு திறைசேரியின் செயலரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அழைத்திருந்த நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் 25 மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடலில் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தன்னிச்சையாக அறிவித்தது.
உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது. தேர்தலுக்கான நிதி விடுவிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்று அறிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு புதிய தேர்தல் திகதியை மார்ச் 3ஆம் திகதி அறிவிப்பதாகக் கூறியிருந்தது.
அன்றைய தினம் உயர் நீதிமன்றம் ஓர் இடைக்காலக் கட்டளையைப் பிறப்பித்திருந்தது. தேர்தலுக்காக ஒதுக்கிய நிதியை விடுவிப்பதற்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்று திறைசேரியின் செயலருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து புதிய தேர்தல் திகதியை திறைசேரியின் செயலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஆராய்ந்து அறிவிப்பதாக ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
அதற்கு அமைவாக திறைசேரிச் செயலர், பொலிஸ்மா அதிபர், அரச அச்சகத் தலைவர், இலங்கை மின்சார சபை தலைவர், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரை நேற்றுக் கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தது.
தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் பிரதி செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுவதாகவும் அதில் பங்கேற்கவேண்டியுள்ளதால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்துக்கு வருகை தரமுடியாது என்று திறைசேரிச் செயலர் தெரிவித்துள்ளார். அவரைத் தவிர ஏனையோர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதனையடுத்து நேற்று மதியம் 1.30 மணிக்கு 25 மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அலுவலர்கள், உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடன் இணையவழியிலான கூட்டம் நடைபெற்றது. இதன்போது தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.
உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும். தபால்மூல வாக்களிப்பு மார்ச் மாதம் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 3 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது