துருக்கி மற்றும் டுபாய் நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள கோதுமை மா

துருக்கி மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிடம் கட்டளை இடப்பட்டுள்ள கோதுமை எதிர்வரும் 15ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக, அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் மா தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதனால் இந்த சந்தர்ப்பத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லையென்றும் கோதுமை மாவுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது நடைமுறைக்கு பொருத்தமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தனது அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஆறு மாதங்களுக்குரிய கோதுமை மா தேவை குறித்து எழுத்து மூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் அங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
அங்கு கருத்து வெளியிட்ட அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன, ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபா வரை அதிகரிக்க எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அது சமூகத்தில் பரப்பப்பட்ட பிரச்சாரம் என்றும் குறிப்பிட்டார்.
