75ஆவது தேசிய சுதந்திரதின விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை காலிமுகத்திடலில் நடைபெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். விசேட அதிதியாக பொதுநலவாய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லன்ட் கலந்துகொண்டார். பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஹீனா றப்பானி பார், ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டக்கெயி சுன்-சுகே, இந்தியாவின் உள்துறை இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன், பூடானின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் ஜெய்பர் ராய், மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மூமன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தேசியக் கொடி ஜனாதிபதி ஏற்றியதைத் தொடர்ந்து, சுதந்திர தின விழா ஆரம்பமானது. தேசிய கீதம் பாடப்பட்டு, போர் வீரர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முப்படையினர், பொலிஸ்;, அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புப் படை ஆகியோரின் இராணுவ அணிவகுப்பும் இடம்பெற்றது. இலங்கை விமானப்படையின் அணிவகுப்பும் இடம்பெற்றது.
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொல்வத்த தர்மகீர்த்தியாராம விஹாரையில் இன்று காலை பௌத்த மத வைபவம் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொண்டார்.
மருதானை பாத்திமா தேவாலயத்தில் கத்தோலிக்க மத வழிபாடுகள் கொழும்பு உதவி ஆயர் வணக்கத்திற்குரிய ஜே.டி.அந்தோனியின் பங்கேற்புடன் நடைபெற்றது.
கிறிஸ்தவ மத விவகார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின ஆராதனைகள் இன்று காலை 6.30க்கு நடைபெற்றன. கிறிஸ்தவ சமய ஆராதணைகள், அருட்தந்தை கிறிஸ்ரி ஜோசப் தலைமையில் காலிமுகத்தில் அமைந்துள்ள கிறிஸ்துநாதர் தேவாலயத்தில் நடைபெற்றன. இலங்கை திருச்சபையின் கொழும்பு மறைமாவட்ட ஆயர் துஷாந்த றொற்றிக்கோ உள்ளிட்ட அருட்தந்தையர்கள், கிறிஸ்தவ அடியார்கள் இதில் கலந்து கொண்டார்கள். கிறிஸ்தவ சமய ஆராதணைகள் இங்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் மொழிகளில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம் சமய நிகழ்வு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று காலை நடைபெற்றது. முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
அமைச்சர்களான அலி சப்ரி, ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த படைப்பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது உரையாற்றிய அமைச்சர் அலிசப்ரி, இலங்கையின் சுதந்திரத்திற்காக அனைத்து சமூகத்தினரும் செயற்பட்டனர். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களிலிருந்து மீள்வதற்கும் சகல சமுகத்தினரும் இணைந்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய திறன் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் முஸ்லிம்களால் பங்களிப்பு வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்து சமய வழிபாடுகள் பம்பலப்பிட்டி வஜிராபிள்ளையார் ஆலயத்திலும் இடம்பெற்றது. இந்த பூஜை நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றார். நாட்டிற்கும், மக்களுக்கும் ஆசிவேண்டி பூஜை நிகழ்வு நடைபெற்றது.
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், 622 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட பல கைதிகளுக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் நல்நடத்தைகளுடன் இருந்த கைதிகள், சிறைச்சாலை அனுமதிச் சபையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய, உரை இன்று மாலை 6.45இற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பாகும்.