எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தேர்தல் திகதி குறிக்கப்பட்ட வர்த்தமானி அரச அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டு அது வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு, வேட்புமனு கையேற்கும் இறுதி நாளன்று அறிவித்திருந்தது. ஆனாலும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இலங்கை அரச அச்சகக் கூட்டுத்தாபனமும் நேற்றுமுன்தினம் இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில், ’தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துடன் தமக்கு எந்தவொரு அறிவித்தலும் கிடைக்கவில்லை ’என்று தெரிவித்திருந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலின்போது கூட இவ்வாறானதொரு வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கவில்லை.
இத்தகைய வர்த்தமானி சட்டப்படி தேவையான ஒன்று என்றபோதும், பொதுவில் இந்த வர்த்தமானி வெளியிடப்படாமை தொடர்பில் எவரும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களது கட்சிகள், சின்னங்கள் மற்றும் தேர்தல் திகதி, இடம் என்பனவற்றைக் குறித்து மூன்று பிரிவுகளாக வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும்.
கடந்த 2018 ஆம் ஆண்டுக்குரிய வர்த்தமானி கூட இப்போதுதான் தேர்தல்கள் திணைக்களத்தால் சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தேர்தல் நடக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளமையால் தேர்தல்கள் ஆணைக்குழு, தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் தேர்தல் திகதி மற்றும் இடம் என்பவற்றை மாத்திரம் குறிப்பிடும் வர்த்தமானியை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியே வெளியிட்டுள்ளது.
இணையத்தில் வர்த்தமானி நேற்று வெளியானபோதும் அதனை இன்றுதான் பதிவிறக்கம் செய்யக் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
TL