Home » தொழிலாளர் சட்டங்களை மாற்றும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு எச்சரிக்கை

தொழிலாளர் சட்டங்களை மாற்றும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு எச்சரிக்கை

Source

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்ட முதலீட்டாளர்களுக்கு வழி வகுக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்ததுடன் காலாவதியான தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக ஒரேயொரு புதுப்பிக்கப்பட்ட சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

“தொழிலாளர் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவன ஏற்பாடுகள், தொழில் முனைவோர் மற்றும் வணிக வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது. தனிமனிதனின் திறமைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் முழுச் சூழலும் வடிவமைக்கப்பட வேண்டும்.”

“புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஒற்றைத் தொழிலாளர் சட்டத்தை உருவாக்க நான் முன்மொழிகிறேன்.”

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்ட ஒரு விடயத்தை மீண்டும் கொண்டுவரும் இந்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், “தனிப்பட்ட தொழிலாளர் சட்ட” முயற்சியை கைவிட வேண்டும் எனவும் தனியார் துறை ஊழியர்களின் பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

தொழிலாளர்களை சுரண்டுவதும், தன்னிச்சையாக பணிநீக்கம் செய்வதும் தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களினால் ஓரளவிற்கு தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், முதலீட்டாளர்களை ஈர்க்கவோ அல்லது திருப்திப்படுத்தவோ அந்த சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாமென சங்கத்தின் பதில் பொதுச் செயலாளர் செல்லையா பழனிநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழில் முயற்சியாளர்களின் திறன்களுக்கு இடையூறு விளைவிக்கும் சட்டம் எதுவும் இல்லை எனவும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் நாட்டின் தொழிலாளர் சட்டங்களை ஏற்க வேண்டும் எனவும், அதற்கு இணங்க முடியாதவர்களின் முதலீடுகளை தவிர்க்க வேண்டும் எனவும் இலங்கை வர்த்தகர்கள், கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கம் ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய தற்போதுள்ள வழிமுறையானது ஆக்கப்பூர்வமாகவோ அல்லது யதார்த்தமானதாகவோ இல்லாமையால், சட்ட அதிகாரம் கொண்ட தொழில் நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூகவியலாளர்கள் அடங்கிய தேசிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டுமெனவும் செல்லையா பழனிநாதன் பரிந்துரைத்துள்ளார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளால் நசுக்கப்படும் உழைக்கும் ஏழை மக்களுக்கு வரவு செலவுத்திட்டம் எந்த நிவாரணமும் வழங்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள தொழிற்சங்கத் தலைவர், தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான தொழில் அமைச்சுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை என ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தியோகபூர்வ, முறைசாரா மற்றும் புலம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை அரசாங்கம் புறக்கணிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனவும், அத்தகைய கொள்கைகளால் வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் இருந்தபோதிலும் நாடு எதிர்மறையான விளைவுகளை அனுபவிக்க நேரிடும் எனவும் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எச்சரித்துள்ளார்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image