Home » நகையை கொள்ளையிடவே கொலை செய்தேன் என கொலையாளி வாக்குமூலம்.

நகையை கொள்ளையிடவே கொலை செய்தேன் என கொலையாளி வாக்குமூலம்.

Source
நெடுந்தீவில் ஐந்து வயோதிபர்களைக்  கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பிய கொலையாளி  புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த சமயம்  கைது செய்யப்பட்டுள்ளார். “அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன். தனியாக நகைகளை கொள்ளையிட்டால் அடையாளம்கண்டு  பிடித்துவிடுவார்கள், என எண்ணி  சம்பவத்தை திசை திருப்பவே அனைவரையும் கொலை செய்தேன்” என  கைது செய்யப்பட்டவர் பொலிஸாரின்  வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சந்தேக நபரிடமிருந்து 26 தங்கப் பவுண் நகைகள், ஆடைகள் மற்றும் அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் கூறுகின்றனர். நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்றுக் காலை  வெட்டுக்காயங்களுடன் ஐந்து  சடலங்கள் மீட்கப்பட்டன. 100 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர். பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு நேற்றுக் காலை அங்கிருந்து வெளியேறிய நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றிரவு கைது செய்தனர். ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 51 வயது நபரே இதன்போது கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து அதிகளவு தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன. அதுதொடர்பில் விசாரணை மேற்கொண்ட போதே சந்தேக நபர் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதன்போது “நான் நெடுந்தீவு சென்றால்  குறித்த வயோதிபர்களின் வீட்டில்தான் தங்கிச் செல்வேன். அதுபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் சென்று தங்கியிருந்தேன். அங்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நகைகள் அணிந்திருந்தனர். அனைவரது நகைகளையும் அபகரித்து விற்பனை செய்து வரும் பணத்தில் கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன். அதனால் நேற்று அதிகாலை 4.30 பின்னர் நித்திரையிலிருந்த அனைவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க எண்ணினேன். நகைகளை மட்டும் அபகரித்துச் சென்றால் பொலிஸார் எளிதில் பிடித்துவிடுவார்கள், அதனால் பொலிஸ் விசாரணையை திசை திருப்ப அனைவரையும் கொலை செய்தேன்” என்று சந்தேக நபர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சந்தேக நபரை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று ஏனைய சான்றுப்பொருள்களை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இன்றுமாலை சந்தேக நபரை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார். TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image