Home » நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது

Source
Share Button

கடும் மழை காரணமாக களனி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளிலும், ஹங்வெல்ல மற்றும் மோதர வரையிலான பகுதிகளில் களனி ஆற்றின் இரு மருங்கிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார். சீதாவக்க, பியகம, கொலன்னாவ, கொழும்பு, வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளில், களனி ஆற்றை சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்தனகலுஓயாவின் தாழ்நிலப் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. களுகங்கையின் கிளை ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால், புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குகுலேங்க நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை அடுத்த வாரமும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்காயிரத்து 755 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்திற்கும், கிங் கங்கை அண்மித்த பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிங்கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக காலி கிங்கங்கைக்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் பியூமி ரசாஞ்சலி தெரிவித்துள்ளார். நெலுவ, தவலம, நாகொட, நியாகம, வெலிவிட்டிய-திவித்துர, பத்தேகம, போப்பே-போத்தல, யக்கலமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறிதளவிலான வெள்ள அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி மாவட்ட உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல்; பிரசாத் கருணாரட்ன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரக்காபொல – தும்பலியத்த பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இரண்டு மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்கியிருந்த 24 வயதுடைய மூத்த மகனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தந்தை மீட்கப்பட்டு வரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது மகனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கேகாலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image