நாட்டின் பொருளாதாரம் அடுத்த வருட இறுதிப் பகுதியில் வழமைக்கு திரும்பும் சாத்தியம்

ஜப்பான், சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் கடன் பெறுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் இணக்கப்பாட்டை எட்ட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோருடன் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார். விசேட கூற்றொன்றை இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றினார். பண்டைய காலம் முதல் இலங்கைக்கு சீனா உதவி வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்திலும் அவ்வாறான உதவிகள் கிடைக்கும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார். ஆசிய அபிவிருத்தி வங்கி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. கடன் பெறுவது பற்றிய இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. சர்வதேச கடன் மாநாட்டுடன் இணைந்து சலுகைக் கடனை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை வழமைக்குக் கொண்டுவருவதன் மூலம் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப கூடுதலான அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிடைக்கும். அடுத்த வருட இறுதிப் பகுதிக்குள் பொருளாதாரத்தை வழமைக்குக் கொண்டுவந்து, ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அச்சிடப்பட்ட பணத்தை விட இரண்டு மடங்கிலான நாணயங்கள் கடந்த காலத்தில் அச்சிடப்பட்டுள்ளன. கடுமையான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது அவசியமாகும். உர நெருக்கடியினால், நாட்டின் விவசாயத்துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது. பணவீக்கத்தினால் சந்தையில் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த சிறுபோகத்தின் போது எதிர்பார்க்கப்பட்டதை விட கூடுதலான அறுவடையை பெற்றுக் கொள்ள முடிந்தது. எதிர்வரும் போகத்திற்குத் தேவையான உரம், விதைநெல் என்பனவற்றை வழங்க அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள கிராமிய மக்களுக்கு நிவாரணங்களும் வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
அரசியல் அமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு கடந்த கால பின்னணியும், தற்கால அவசியமும் காணப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 22ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் பற்றி முன்னாள் ஜனாதிபதிகளோடும், தற்போதைய ஜனாதிபதியுடனும், எதிர்க்கட்சித் தலைவருடனும் கலந்துரையாடியதாக பிரதமர் கூறினார். இதற்காக ஒத்துழைப்பு வழங்குவது சிரமமானதாகும் என்று எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. இதனால், சபாநாயகர் தலைமையில் ஒன்றுகூடி, அரசியல் அமைப்புத் திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
43 கட்சித் தலைவர்கள் தலைமையிலான குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே 22ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் சமர்ப்பிக்கப்படும் என்று விவாதத்தில் கலந்து கொண்டு, நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது ஒரு தரப்பினால் மாத்திரம் தயாரிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் இதுபற்றி விளக்கம் கோரி வருவதாகவும், அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
22ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் பற்றி தெரிவுக்குழு ஒன்றின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தனித்தனிக் குழுக்களாக இதனை ஆராய்வது பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறினார்.
இந்த சட்டமூலம் பற்றி நீண்ட காலமாக கலந்துரையாடியதாகவும், முன்னாள் ஜனாதிபதிகளின் ஆதரவுகளும் இதற்குக் கிடைத்திருப்பதாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுபற்றி கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, பாராளுமன்ற கோப் குழுவின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
