நாட்டை பிளவுபடுத்துவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயார் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்

.
நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயார் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரத்தின் படி நாட்டின் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு தான்; கட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதன்படியே அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அல்லாதுவிடின் பாராளுமன்றத்தின் ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த திருத்தத்தை நீக்குவதற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றத்துக்கு தனிப்பட்ட பிரேரனையை சமர்ப்பிக்க முடியும். அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை எனின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நேரிடும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போதே அவர் இதனைக் கூறினார். நாட்டை பிரிப்பதற்கு நான் தயாராக இல்லை. இலங்கையிலுள்ள தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் உட்பட சகல சமூகத்துடனும் சிங்களவர்கள் இணைந்து வாழ வேண்டும.;; எமது தேசிய கீதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு தாயின் மக்கள் என்பதை பாதுகாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் முன்னேற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட பிரச்சினைகளை அனைவரினதும் இணக்கப்பாட்டுடன் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
