Home » நீர் வளம், நில வளம் உள்ள முல்லை மண்ணில் நிம்மதி ஏன் இல்லை?( சிறப்புக் கட்டுரை தொடர் பாகம்;- 03)

நீர் வளம், நில வளம் உள்ள முல்லை மண்ணில் நிம்மதி ஏன் இல்லை?( சிறப்புக் கட்டுரை தொடர் பாகம்;- 03)

Source

 யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்.

உலகெங்கும் வளமான விளைநிலங்கள் இராணுவப் பயன்பாடு உட்பட இதர பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உணவு நெருக்கடி பல நாடுகளில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.

அண்மையில் ஐ.நாவின் அங்கமான உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை வாசித்தால் கவலை மட்டுமல்ல கலக்கமும் ஏற்படும். இலங்கையில் உணவு நெருக்கடி மற்றும் பாதுகப்பின்மை ஏன் ஏற்பட்டுள்ளது, அது ஏன் மேலும் தீவிரமடையும், அதற்கான தீர்வுகளை எப்படிப் பெற்றுக்கொள்ள முடியும் போன்றவகை புள்ளிவிவரங்களுடன் அந்த அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

அதில் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று, நாட்டில் ஒவ்வொரு துண்டு நிலத்தையும் அறிவியல் ரீதியான விவசாய முறைகள் மூலம் பயன்படுத்தி, உணவு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் துறைசார் வல்லுநர்கள் கூறுவதை கேட்டு ஆட்சியாளர்கள் அதை நாட்டு நலனிற்காகச் செயல்படுத்துவதில்லை என்பது இலங்கையின் சாபக்கேடு.

ஆட்சியில் இருக்கும் ”ஆல் இன் ஆல் அழகு ராஜாக்களின்” அனைத்தும் யாமரிவோம் என்ற எண்ணப்பாடே காரணம் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இலங்கையில் நிர்வாகக் குளறுபடிகள், மறைமுகச் செயல்பாடுகள் மற்றும் திட்டமிடலின் தோல்வி ஆகியவை எப்படி விவசாய உற்பத்தியை பாதித்துள்ளன என்பதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை ஒரு உதாரணமாகக் கருத முடியும்.

இந்த மாவட்ட நிலப் பரப்பின் அளவு, அதில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலம், எஞ்சிவை என அனைத்தும் புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டோம். இதேநேரம் தொழில் வாய்ப்பாகவும், வாழ்வாதார மையங்களாகவும், அழிவடைந்த இடங்களும் இன்றும் பயிர்ச் செய்கைக்குகூட தடை விதிக்கப்பட்டே காணப்படுகின்றன. அதனையும் அரச  திணைக்களங்கள் ஆக்கிரமித்துள்ளமை 
கடந்த பகுதுகளில் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிடப்பட்டது.

இந்த பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வாழ்வாதார இடங்களை சான்று ஆவணங்களுடன் அளிக்க விழைந்துள்ளோம். கடின முயற்சிகளுக்கு பிறகு சில ஆவணங்கள், பிரதிகள், குறிப்புகள், வரைபடங்கள் போன்றவற்றை கண்டறிய முடிந்தது.

உதாரணமாக 1968 ஆம் ஆண்டு  நெல் அல்லாத பயிர்ச் செய்கைக்கு 2,534 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு   உருவாக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின்  மன்னகண்டல் ஏற்று நீர்ப்பாசண நிலம் மட்டுமன்றி இயந்திரத் தொகுதி, நீர்வாய்க்கால்  அமைவிடத்தைக்கூட இன்று  வனவளத் திணைக்களமே ஆக்கிரமித்து நிற்பதாக அங்கே பயிர்ச் செய்கை மேற்கொண்டவர்கள்  கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு அப்பால் முல்லைத்தீவு மாவட்டத்தின் 278 சதுரக் கிலோ மீற்றர் நிலப் பரப்பளவு பிரதேசம் எவருக்குமே தெரியாது அந்த மாவட்டத்தில் இருந்து காணாமல் போயுள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல்  தெரியவந்துள்ளது.

எல்லை மீள் நிர்ணயத்தின் பின்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 278 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளி வந்துள்ளது. இது பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் கிணற்றைக் காணவில்லை என்று கூறுவது போலுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டமானது 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரையில் மாவட்டத்தின் சகல தரவுகளின் அடிப்படையில் 2,693 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டிருந்த ஓர் மாவட்டமாகும். ஆனால் 2021 ஆம் ஆண்டு புதிய எல்லை மீள் நிர்ணயத்தின் பின்பு நில அளவைத் திணைக்களம் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில் 2,415 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவே காட்டப்படுகின்றது. இதை மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்கின்றது.

அவ்வாறானால் 278 சதுரக் கிலோ மீற்றர் நிலப்பரப்பு அதாவது 27,800  கெக்டேயர் நிலப்பரப்பு எங்கே என்ற பெரும் சர்ச்சை ஏறபட்டுள்ளது. இதனால் அயல் மாவட்டங்களான வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களை ஆராய்ந்தபோது வவுனியா மாவட்டத்தில் 76 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு அதிகரித்துள்ளது. இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தின் மொத்த அளவு கடந்த ஆண்டு வரையில் ஆயிரத்து 237 சதுரக் கிலோ மீற்றராக காணப்பட்டபோதும் தற்போது 1,340 ச.கிலோ மீற்றர் என்கின்றது நில அளவைத் திணைக்களம்.
அதாவது  முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்போன 278 சதுரக் கிலோ மீற்றரில் பொபஸ்வேவ திசையின் ஊடாக வவுனியா வடக்கில் அதிகரித்துள்ள 73 சதுரக் கிலோமீற்றருமாக மொத்தம் 176 ச.கி.மீற்றர் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் முல்லையில் காணாமலபோன  278  சதுரக் கிலோ மீற்றரில் மிகுதி 102 சதுரக் கிலோ மீற்றரும்  வெலி ஒயா பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து பதவியாவுடன் அல்லது மதவாச்சியுடனும் சில பகுதி செல்கின்றதா என்ற பெரும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது. இதற்கு மாவட்ட அதிகாரிகளிடம்  இருந்தும் உரிய பதில் சரியான முறையில் வெளிவரவில்லை.

இது ஒருபுறமிருக்க   முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 1968ஆம் ஆண்டு  ஏற்று நீர்ப்பாசணம், கால்வாய் நீர்ப்பாசணம் என இரு  திட்டங்களின் கீழ் தலா 3 ஏக்கர் வீதம் நீர்ப்பாசணத் திணைக்களம் ஊடாக  பயணாளிகளிற்கு  வழங்கப்பட்டது.

இதில் 2,534 ஏக்கர் 1968 இல் முத்தையன்கட்டு குளத்தின் கீழ்  நெல் அல்லாத பயிர்ச் செய்கைக்கு அனுமதிக்கப்பட்டு 1990ஆம் ஆண்டு வரையில்  பயிர்ச் செய்கையும் இடம்பெற்றன. ஆனால் இப்பகுதியில் 9,000 ஏக்கர் நிலம் 1921 ஆம் ஆண்டே காடாக அரச இதழ் வெளியிட்டதாகவும் அதில்  இந்த மன்னகண்டல் காணி உள்ளிட்ட பகுதியும் அடங்குவதனால் அங்கே பயிர்ச் செய்கைக்கு அனுமதிக்க முடியாது என்கின்றது  வனவளத் திணைக்களம்.

அதாவது இந்தப் பகுதியை தனது பிடியில் வைத்துக்கொண்டு பயிர்ச் செய்கைக்கு அனுமதி மறுக்கின்றனர். அவ்வாறானால் 1968 முதல் 1983 ஆம் ஆண்டு வரை என்ன செய்தீர்கள் என்ற வினாவிற்குப் பதில் கிடையாது. இதற்கான ஆதாரமாக 1968 ஆம் ஆண்டு  3 ஏக்கர் வீதம் வழங்கியபோது நீர்ப்பாசணத் திணைக்களம் வரைந்த வரைபடம் எமக்கு கிட்டியது. ( அதனை இங்கே தருகின்றேன் ).

இதேநேரம் ஏற்று நீர்ப்பாசணம் நடந்த இடத்தில் வாய்க்கால்கள் இன்றும் சாட்சியாகவுள்ளன. இதற்கு புகைப்பட ஆதாரமும் உள்ளது.

முல்லைத்தீவின் குருந்தூர் மலையிலே அமைக்கப்படும்  விகாரையுடன்  259 ஏக்கருக்கு குறைவான நிலம் காணப்பட்டமைக்கு சில ஆதாரங்கள் முன்வைக்கப்படுவதனால் அந்த 259 ஏக்கர் நிலத்தையும் விகாரைக்கு  வழங்க மாவட்ட அரச நிர்வாகம்  முன் வருகின்றபோதும் விகாரையை நிரவகிக்கும்  பௌத்த துறவியோ 430 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்வதனாலேயே அங்கும் சர்ச்சை நிகழ்கின்றது என மாவட்டச் செயலகம் அறிக்கையிட்டுள்ளது.

மாவட்டத்தின் மற்றுமோர் மிகப்பெரிய சொத்தாகவும் 150 முதல் 200 பேருக்கான வேலை வாய்ப்பாகவும் திகழ்ந்த கூழாமுறிப்பு ஓட்டுத் தொழிற்சாலை இன்றும் பாழடைந்து காணப்படுகின்றது. இலங்கையில் போர் உச்சம பெற்ற  1990ஆம் ஆண்டுடன் அரச நிர்வாகம் இத்தொழிற்சாலையை முழுமையாக கைவிட்டது. அதனால்  தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகம் இத் தொழிற்சாலையை  6 ஆண்டுகள் இயக்கினர். இதன்போது  ஓட்டுசுட்டான் தொழிற்சாலை எனவும் பண்டாரவன்னியன் ஓட்டுத்  தொழிற்சாலை எனவும் இயங்கிய காலத்தில்  1997 ஆம் ஆண்டு சண்டியன் ஜெயசிக்குறு என்னும் இராணுவ நடவடிக்கையில் இராணுவம் முன்னேறிய சமயம் தொழிற்சாலை  முழுமையாக கைவிடப்பட்டு அழிவடைந்து செல்கின்றது.

பல நூறு கோடி ரூபா சொத்துப் பெறுமதியில் இருந்த தொழிற்சாலை இன்று இரும்பாகவே காட்சி தருவது அங்கே பணியாற்றிய பலரின் கண்களில் இரத்த கண்ணீரையே வரவழைக்கிறது. 1991 முதல் 1997 வரையான காலப் பகுதியில் அயல்  கிராமங்களிற்கு ஒளியூட்டிய இடமாகவும் இதே தொழிற்சாலை விளங்கியது. இங்கிருந்த மின் பிறப்பாக்கி மூலம் மின்சார விநியோகம் இடம்பெற்றது.

இவற்றைப்போன்றே கொக்குத்தொடுவாய்- தென்னமரவடி இணைப்பு பாலம் அமைத்து தருமாறு 50 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால்  கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. இந்தப் பாலத்தை அமைக்க 1,500 மில்லியன் ரூபா வேண்டும் என 2017 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட நிலையில் தற்போது 3,500 மில்லியன் ரூபா வேண்டும் என்ற நிலையில் இனி அமைக்கப்படுமா என்கின்ற கேள்வியும் உள்ளது. இப்பாலம் அமைக்கப்பட்டால் கரையோரமாக திருகோணமலை யாழ்ப்பாணம் வரையான போக்குவரத்துக்கள் இலகுபடுத்தப்படும். மறுபுறத்தே  வட்டுவாகல் பாலம் அமைக்க ஆயிரம் மில்லியன் ரூபா 2016ஆம் ஆண்டில்  கோரப்பட்டது அவ்வாறானால் இனி 2,250 மில்லியன் ரூபாவும் போதாது என்கின்ற நிலைமையே காணப்படுகின்றது. இப்பாலம் உள்ளிட்ட சுமார் 2 கிலோ மீற்றர் புனரமைப்பு செய்யப்பட்டால் தினமும் பல ஆயிரம் பேர் வருகை தரும் சுற்றுலாப் பிரதேசமாக இப்பகுதி மாறும் அதன் மூலம் பல நூறுபேருக்கு வேலை வாய்ப்பும் பெருந்தொகை அந்நியச் செலவாணி ஈட்டும் இடமாகவும் வளர்ச்சி அடையும் ஆனால் இப் பாலம் இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க கோருபவர்கள் வடக்கிற்கும் கிழக்கிற்கும் இணைப்பாக உள்ள கொக்குத்தொடுவாய்ப் பாலம் அமைக்க (இணைக்க)  முன் வரவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

வீதிகள், இடங்களின் அவலத்தை பட்டியலிடும்போது இலங்கையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற கேலிக்குரிய வீதிப் புனரமைப்பையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். அதாவது இலங்கையிலேயே வீதிக்கு படிகட்டிய கேலிக்கூத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிப் பகுதியில் மகிந்தவின் ஆடசிக் காலத்திலேயே இடம்பெற்றது. அது என்ன என்பது உட்பட அடுத்த வாரம் பார்ப்போம்.

( அவலப் பட்டியல் நீளும் )

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image