Home » நெருப்போடு விளையாட  கூடாது என ஆளுநருக்கு சிறீக்காந்தா அறிவுரை.

நெருப்போடு விளையாட  கூடாது என ஆளுநருக்கு சிறீக்காந்தா அறிவுரை.

Source

வடக்கு மாகாண ஆளுநர் நெருப்போடு விளையாடுவதற்கு முயற்சிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ந.சிறீகாந்தா வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கில் தனியார் காணிகளை படைத்தரப்புகளுக்கும் மற்றும் அரச திணைக்களங்களுக்கும் காணிகள் தேவைப்படுகின்றன என்ற பெயரில் சுவீகரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளின் ஓர் அங்கமாகவே வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நாளை (15) செவ்வாய்க்கிழமை ஆளுநர் தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது என்று நாங்கள் அறிகின்றோம்.

வடக்கு மாகாண ஆளுநர் நெருப்போடு விளையாடுவதற்கு முயற்சிக்கக் கூடாது. இது மக்களுடைய ஜீவாதாரப் பிரச்சினை.

காணி என்பது ஒரு மனிதரை பொறுத்தமட்டில் உணர்வுகளுடன் சங்கமித்த ஒன்று. வடக்கு மாகாண மக்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்களுக்கு முகம்கொடுத்துத் கொண்டு இருக்கும் நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இது பெரும்மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்கும்.

மக்கள் அனைவரும் வீதிகளுக்கு வர வேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பார்கிறார்களா? என்ற கேள்வியைதான் நான் எழுப்ப விரும்புகின்றேன்.

இந்த முயற்சிகள் உடனடியாகக் கைவிடப்படவேண்டும். இது மக்களுடைய அடிப்படை உரிமைகளை சுரண்டிப் பார்க்கின்ற, சவால் விடுகின்ற ஒரு முயற்சி.

காணி சுவீகரிப்பு என்பது அரசுக்கு ஒரு நியாயமான தேவைக்காக மக்கள் நலன் கருதி சுவீகரிப்பு தேவைப்படுமாக இருந்தால் அதை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால், தூர நோக்கத்தோடு வடக்கிலே காணிகளை கபளீகரம் செய்து, அரசினுடைய பிடியை, பௌத்த சிங்கள பேரினவாதத்தின் பிடியை வடக்கிலே பல்வேறு இடங்கிளிலும் இறுக்குகின்ற நோக்கத்தோடு எடுக்கப்படுகின்ற முயற்சியாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

இது இன்று நேற்று எடுக்கப்படுகின்ற முயற்சி அல்ல. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் வருவது மக்கள் எதிர்ப்பு காட்டுவது மக்களின் எதிர்பைக் கண்டு பின்வாங்குவது, பல சாட்டுகள் கூறி மீண்டும் அதிகாரிகள் களத்துக்கு வருவது இவையெல்லாம் பழக்கப்பட்டுப்போன சங்கதிகள்.

இவை எமக்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகின்றன. இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அந்தஸ்து என்ன என்பதை எங்கள் மத்தியில் எவராவது இதுவரை புரிந்துகொள்ள முடியாமல், உணர்ந்துகொள்ள முடியாமல் இருந்தால் அவர்களுக்கு கூட உணர்த்தக்கூடிய விதத்திலே இந்த நடவடிக்கைகள் உள்ளன.

இவற்றுக்கு நாங்கள் நிச்சயம் முகம் கொடுப்போம். இன்றைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மக்கள் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலே இவை முன்னெடுக்கப்படுமாக இருந்தால் பெரும் போராட்டம் ஒன்றுக்கு வழிவகுக்கும் என்பதை பணிவாகவும் நேர்மையாகவும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த ஆளுநர் வடக்கை பொறுத்தமட்டிலே என்ன செய்துகொண்டிருக்கின்றார் என எமக்குப் புரியவில்லை. வடக்கின் நிலைமை அவருக்கு தெரியவில்லை. அவர் ஒரு தமிழர். ஆனால், அவர் தற்போது அரசின் ஒரு முகவராக வடக்கில் தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமாகச் செயற்படுவது ஒரு சாபக்கேடு.

ஆளுநர் தன்னை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். இல்லையெனில் அவரை இங்கிருந்து மாற்றுங்கள் என்ற கோரிக்கையை வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலைமை தொடருமாக இருந்தால் இந்த ஆளுநர் எமக்குத் தேவையில்லை. இவருக்கு பதிலாக நேர்மையான ஒரு சிங்களவரே காரியங்களைக் கொண்டு செல்ல முடியும். எடுபிடித் தமிழரை விட நேர்மையான சிங்களவர் எவ்வளவோ மேல் என நான் நம்புகின்றேன்” – என்றார்

TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image