நெல் கொள்வனவுக்கென மேலும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்கென மேலும் 300 மில்லியன் ரூபா இவ்வாரத்திற்குள் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்கென கடந்த வாரம் 250 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். ஐந்து லட்சத்து 12 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெல்லை கொள்வனவு செய்ய இரண்டு பில்லியன் ரூபா தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உரிய தொகையை இரண்டு அரச வங்கிகளின் ஊடாக பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது அமைச்சர் உரையாற்றினார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களின் போஷாக்கை மேம்படுத்துவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீன அரசாங்கம் வழங்கும் பத்தாயிரம் மெற்றிக் தொன் அரிசியை போஷாக்குக் குறைபாடு கொண்ட பிள்ளைகளின் குடும்பங்களுக்கு வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.
நாட்டில் 27 ஆயிரம் பிள்ளைகள் மந்தபோசனையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற மன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 54 ஆயிரம் பேர் பொதுவான மந்தபோசனையினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மந்தபோசாக்கை ஒழிப்பதற்கு 15 லட்சம் குடும்பங்களுக்கு உதவுவது அவசியமாகும். கர்ப்பிணித் தாய்மாருக்கு போசாக்குப் பொதியொன்றை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன வலியுறுத்தினார்.
கர்ப்பிணித் தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் என இணைந்த போஷாக்கு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி பூரண ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறினார். மந்த போஷாக்கினால், தொழிற்படை சீர்குலைந்து தேசிய உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
