Home » பசியில் வாடும் தோட்ட மக்களுக்கு ஆங்கில மொழிமூல பராமரிப்பு நிலையம்

பசியில் வாடும் தோட்ட மக்களுக்கு ஆங்கில மொழிமூல பராமரிப்பு நிலையம்

Source

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில் எந்தவொரு நிவாரணமும் கிடைக்காத தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களை வரவு செலவுத் திட்டம் மேலும் பட்டினியில் ஆழ்த்தியுள்ளதாக மலையக மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் அமைப்புக்கள் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்ற நிலையில், பெருந்தோட்ட மக்களுக்காக ஆங்கில மொழியில் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை ஆரம்பிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தயாராகி வருகிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகைத்தந்து இருநூறு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடத்தப்படும் வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாக ஆங்கில மொழிமூல பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

“தோட்டத் தொழிலாளர்களின் நலன் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார். அதன் பிரகாரம் இந்த ஆங்கில வழி பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.”

நாடளாவிய ரீதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஆங்கில வழி பகல்நேர பராமரிப்பு நிலையங்களை ஆரம்பிக்கும் விசேட செயற்திட்டத்தின் முன்னோடி செயற்திட்டங்கள்  ஜனவரி மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும், அதனை பெருந்தோட்ட மக்களுக்காக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வறியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தோட்டப்புறங்களில் வாழ்கின்றனர்.

இதற்கமைய, வறுமையில் வாடும் சனத்தொகையில் 51 வீதமானோர் பெருந்தோட்டத் தொழிலாளர் என, நாட்டில் உணவு நெருக்கடி குறித்த குடும்ப மட்டத்திலான ஆய்வுகள் உறுதிப்படுத்தியதாக நவீன அடிமைத்தனம் தொடர்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடோ  கூறியிருந்தார்.

இலங்கையின் உணவு நெருக்கடி குறித்த, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவு அமைப்பின் கூட்டு விசேட அறிக்கை, உலக உணவு அமைப்பின் கண்காணிப்பு அறிக்கை, இலங்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும்  நவீன அடிமைத்தனம் தொடர்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடோ மனித உரிமைகள் பேரவைக்கு முன்வைத்த அறிக்கை உட்பட நான்கு சர்வதேச நிறுவனங்கள் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையை எடுத்துக் காட்டுகின்றன.

வாழ்வதற்கு போதுமான ஊதியம் கிடைக்காமை, தங்குமிடமின்மை, சுகாதார வசதிகள் இல்லாமை ஆகியவற்றுடன் தோட்டத் தொழிலாளர்கள் குளவி, சிறுத்தை, பாம்பு போன்ற வனவிலங்குகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

தற்போது ஒரு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் லயின் அறைகளில் அடைபட்டுள்ளதாகவும், அவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட முப்பத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமை இன்னும் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை எனவும் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பெரியசாமி முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்கள் தற்போது வசிக்கும் வசதி குறைந்த வீடுகளை வகைப்படுத்தி புள்ளி விபரங்களை  2022 நவம்பர் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், தோட்ட மக்களுக்கு தேவையான வீடுகளின் எண்ணிக்கை  ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்தை அண்மித்துள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் வீடற்ற மக்களில் தோட்டத் தொழிலாளர்கள் முன்னணியில் உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனின் கூற்றுக்கு அமைய, தோட்டத் தொழிலாளர்களுக்கு 36,158 கழிவறைகள் தேவைப்படுகின்றன.

நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு தோட்டத் தொழிலாளர்கள் பல வருடங்களாக மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை.

2023ஆம் ஆண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வந்து, 200 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மலையக மக்களைக் காக்கும் இயக்கத்தின் ஆலோசகர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடத்தப்படும் தொடர் வேலைத்திட்டங்களுடன் இணைந்து தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக பல விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசாங்கம் இதுவரை அறிவிக்கவில்லை.

N.S

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image