Home » பல்கலைக்கழகக் கட்டமைப்பில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

Source

கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும்போதே, இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் கால தாமதம் தவிர்க்கப்பட்டு மாணவர்கள் குறித்த காலத்திற்குள் கல்வியை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவத் தலைவர்களுடன் சனிக்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில், றோயல் கல்லூரியின் சிரேஷ்ட மாணவத் தலைவர் கவீஷ ரத்நாயக்க தலைமையில் மாணவத் தலைவர்கள் சபையின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கல்லூரியின் விவகாரங்கள் மற்றும் நாட்டின் கல்வித்துறையின் நிலைமைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி பதிலளித்தார்.

இங்கு, பல்கலைக்கழகக் கல்வி குறித்து ஜனாதிபதி மாணவர்களிடம் கேட்டறிந்ததோடு, வெளிநாட்டு உயர்கல்வியில் பட்டம் பெற எடுக்கும் காலத்திற்கும் உள்நாட்டு பல்கலைக்கழகத்தில் எடுக்கும் காலத்திற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக மாணவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதற்கான முறையான தீர்வு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், வெளிநாட்டுக் கல்வியை விட உள்நாட்டுப் பல்கலைக்கழகத்தின் கல்வியின் பெறுமதியை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாடசாலைக் கல்வியை முடித்து உயர்கல்விக்கு தகுதி பெறும் மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், குருநாகல், மட்டக்களப்பு உட்பட பல பிரதேசங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் விரைவில் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேபோன்று, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை தனியான வளாகமாக மாற்றுவதற்கும், தேசிய வர்த்தக முகாமைத்துவ பாடசாலை (NSBM) மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகம் (SLIIT) ஆகிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கு, தேசிய பல்கலைக்கழக தகைமைகளை வழங்குவதற்கு உள்ள வாய்ப்புகள் தொடர்பில் தாங்கள் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகப் பகிடிவதைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, றோயல் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி, ஆனந்தா கல்லூரி, டி.எஸ். சேனநாயக்கா வித்தியாலயம் போன்ற கொழும்பு பாடசாலைகளிலிருந்து வருடாந்தம் அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும், புதிய மாணவர் பகிடிவதைகள் இடம்பெறும் போது அவர்கள் அது தொடர்பில் மௌனமாக இருப்பதையே காணமுடிகிறதாகவும் குறிப்பிட்டார்.

பகிடிவதைகளை தடுக்கும் கடமை இந்தப் பாடசாலைகளுக்கு இருப்பதாகவும் அதற்காக பாடசாலையின் சிரேஷ்ட மாணவத் தலைவர்களுக்கு பாடசாலை நாட்களில் இருந்தே பொறுப்பான சில பணிகளை செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகக் கல்வி மிகவும் அழகானது எனவும், பகிடிவதையால் மாணவர்கள் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் நிலைமை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கான தீர்வுகளை முன்வைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் வலியுறுத்தினார்.

றோயல் கல்லூரியின் அபிவிருத்திக்காகவும் கல்லூரியின் நற்பெயருக்காகவும் மாணவர் தலைவர் சபை ஆற்றுகின்ற பங்களிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

N.S

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image