பழ.நெடுமாறன் 45 ஆண்டுகளாக தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர். பல செயற்பாடுகளில் ஒன்றாகப் பயணித்தவர். அவர் ஒரு விடயத்தைக் குறிப்பிடுவதைச் சாதாரணமாகவும் எடுக்க முடியாது. நாம் இந்த விடயத்தில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் ஊடாக அறிந்தேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரிழந்து விட்டார் என்று இலங்கை இராணுவம் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி அறிவித்து உடலைக் காட்டியபோது, மே 20ஆம் திகதி சென்னையில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்ட நான், அது விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் அல்ல என்று உறுதியாகக் கூறியிருந்தேன்.
முடிந்தால் டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் நிரூபியுங்கள் என்று இலங்கை அரசாங்கத்துக்கு சவால் விடுத்திருந்தேன். இதைப் பல தடவைகள் மீண்டும் மீண்டும் நான் கூறியிருந்தேன். டி.என்.ஏ பரிசோதனையை நடத்துங்கள், அல்லது மரணச் சான்றிதழை வழங்குங்கள் என்று கூறியிருந்தேன். இலங்கை அரசாங்கம் இன்றுவரை அதைச் செய்யவில்லை.
இந்தியாவில் ஒரு வழக்குக்காக வே.பிரபாகரன் தேடப்படும் நிலையில், அதற்கான மரணச்சான்றிதழ் ஒன்றைக்கூட இலங்கை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை என்றால் அதன் பின்னணி என்ன?
உடலை எரித்து விட்டு சாம்பலைக் கடலில் கரைத்துவிட்டோம் என்று அரசாங்கத்தின் ஒரு தரப்பு கூறியிருந்தபோது, இன்னொரு தரப்பு உடலைப் புதைத்துவிட்டோம் என்று கூறியிருந்தது.
பழ.நெடுமாறன் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று கூறியிருக்கின்றார். பழ.நெடுமாறனுக்குத் தெரிந்த அனைத்து விடயங்களும் எனக்குத் தெரியும் என்று கூறமுடியாது. அதனால் அவர் கூறியதை இல்லை என்று மறுக்க முடியாது என்றார்.
TL