பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை

.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையை அடுத்து, பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கை தற்போது இடம்பெறுவதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை இன்றைய தினம் போக்குவரத்து அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால், இவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தேசிய கொள்கைக்கு அமைய, நான்கு சதவீத தாக்கம் ஏற்படுமானால் மாத்திரமே, கட்டண மறுசீரமைப்பு மேற்கொள்ள முடியும் என அனைத்திலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்ஜித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முச்சக்கர வண்டிகளில், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் பத்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. முதலாவது கிலோமீற்றருக்கான முச்சக்கரவண்டி கட்டணமான 100 ரூபாவாகவில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அனைத்திலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிபெட்கோ எரிபொருள் நிலையங்களை அண்டிய பகுதிகளில் காணப்படும் வரிசை அகற்றப்பட்டதன் பின்னரே, சிபெட்கோ ஊடாக எரிபொருள் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வரிசை காணப்படுமானால், அந்த நிலையத்தின் ஊடாக ஒருபோதும் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் பதிவு முறை மூலம் எதிர்காலத்தில் எரிபொருள் வழங்கப்படும். இதனை நடைமுறைப்படுத்தும் திகதி அறிவிக்கப்படவுள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் வாகனங்களை உடைய அனைவருக்கும் வாராந்தம் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
ஒக்டேன் 95 ரக எரிபொருள் தொகையொன்று நாட்டிற்குக் கிடைத்துள்ளதாக இந்திய எரிபொருள் நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். அதன்படி, அந்த வகை பெற்றோலை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும். திருகோணமலை எண்ணெய் வளாகத்தில், 125 பௌஸர்களுக்கு இரண்டு மில்லியன் லீற்றர் பெற்றோல் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தேவைபாட்டிற்கு, உயரிய வகையில் விநியோகத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
