பாடப்புத்தகங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகளை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகளை தமிழகத்திலிருந்து தருவிக்க ஏற்பாடு

பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகளை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசி எதிர்வரும் 3 வாரங்களில் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுமென கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இதற்காக இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் கிடைத்துள்ள நிதியிலிருந்து 65 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. தேவையான கடதாசி உள்ளிட்ட ஏனைய பொருட்கள் தொடர்பான தகவல்கள் அமைச்சிற்கும் திறைசேரிக்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் தற்சமயம் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதனிடையே, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.
