பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது. இந்த வாரத்திற்கான பாராளுமன்றக் கூட்டம் நாளை மட்டும் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவகார செயற்குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டது என்று பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்தார்.
செஸ் வரி திருத்தம் தொடர்பில், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டமூலத்தின் கீழ் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விபரிக்கப்பட்டுள்ள கட்டளைச் சட்டம் குறித்து அன்றையதினம் விவாதிக்கப்படும்.
அதேவேளை, இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டமூலத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது. இந்த மாதத்திற்கான இரண்டாவது பாராளுமன்ற கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெறும். அதன்பின்னர் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையும் பாராளுமன்றம் கூடவுள்ளது.