புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் – வாக்கெடுப்பு நாளை

வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்காக ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படும். இதற்காக பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூட உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அதிகாரியாக செயல்படுவார். வாக்கெடுப்பு நாளை இடம்பெறும். ஜனாதிபதி பதவிக்காக தாம் போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இந்த பதவியை வகிப்பதற்கான எண்ணத்தை குறிக்கும் எழுத்துமூல இணக்கப்பாடு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் இன்றைய தினத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க விரும்புவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் பிரேரணையை முன்மொழிய வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் அந்த சந்தர்ப்பத்தில் சபையில் இருக்க வேண்டியது கட்டாயமாகும். அதன் பின்னர் பெயரிடப்பட்ட பெயரை மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் உறுதிப்படுத்தவேண்டும். இது தொடர்பில் விவாதிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது. இன்றைய தினம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்கள் பிரிக்கப் படும் பட்சத்தில் நாளைய தினம் ஜனாதிபதிக்கான தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு தினத்திலும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தாட்சி உத்தியோகத்தராக செயற்படுவார்
