புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ளது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பு இன்று முற்பகல் பத்து மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றார்கள்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்றைய வாக்கெடுப்பின் போது தெரிவத்தாட்சி அதிகாரியாக பணியாற்றவுள்ளார். புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் தாம் இந்தப் பதவியை வகிக்க தயார் என்பதை எழுத்து மூலம் அறிவிப்பது அவசியமாகும். இதன் பிரதியை தமக்கு கையளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் கூறினார். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட ரணில் விக்கிரமசிங்க ஆறு தடவைகள் நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அவருடைய பெயரில் இந்த வாக்கெடுப்பிற்காக முன்மொழிந்திருந்தது. ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க பல்வேறு கட்சிகள் தீர்மானித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் போட்டியிடும் டலஸ் அழகப்பெரும நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவராவார். மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனுரகுமார திசாநாயக்க இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
