இலங்கைக் கடற்படையால் கச்சதீவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனடியாக அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
கச்சதீவு திருவிழா மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்வதுடன் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது கச்சதீவை சிங்களமயமாக்கும் செயற்பாடாகக் காணப்படுகின்றது. புத்தர் சிலைக்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டால் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், மத நல்லிணக்கத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் அமையும்.
புத்தர் சிலை வழிபாடு என்ற பெயரில் சிங்களவர்களையும், சீனர்களையும் கச்சதீவில் முகாமிடச் செய்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவை உளவு பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுவதோடு, இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்பதனையும் மறுக்க முடியாது.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றார்.