உலக பௌத்த வரலாற்றில் மூன்று பிரதான நிகழ்வுகள் இடம்பெற்ற வெசக் நோன்மதி தினம் இன்றாகும். சித்தார்த்த குமாரரின் பிறப்பு, புத்தர் என்ற நிலையை அடைந்தமை, பரிநிர்வாணம் ஆகிய மூன்று பிரதான நிகழ்வுகள் நடந்த தினமாக வெசக் நோன்மதி தினம் கருதப்படுகின்றது. புத்தபெருமானின் வாழ்வில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற நாளாகவும் இன்றைய தினம் கருதப்படுகின்றது. புத்தபெருமானின் இலங்கைக்கான மூன்றாவது விஜயமும் இதேபோன்ற தினம் ஒன்றில் இடம்பெற்றதாக பௌத்த இதிகாசங்கள் சான்றுபகிர்கின்றன. சிவனொளிபாத மலைக்கான விஜயமும் வெசக் நோன்மதி தினத்தில் இடம்பெற்றதாக பௌத்த இதிகாசங்கள் சான்றுபகிர்கின்றன. விஜய மன்னன் தனது 500 பரிவாரங்களோடு வெசக் போயா தினத்தில் இலங்கைக்கு வருகை தந்ததாக மகாவம்சம் கூறுகின்றது. உலக பௌத்த பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான அனுராதபுரம் – றுவன் வெலிசாயாவின் நிர்மாணப் பணிகளும் இதேபோன்ற ஒரு தினத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கையின் வரலாறுகள் கூறுகின்றன.
தற்போதைய பூகோள ரீதியான நெருக்கடிகளுக்கும் சமூச பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான ஒரே வழி குணநலங்களுடன் கூடிய பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவதாகும் என்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதி சங்கைக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீசித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். வெசக் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.
தூய்மையான உள்ளத்துடன் செயற்பட்டு சரியான பாதையை அடையாளம் காண்பது அவசியம் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீஞானரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். சிறந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காக பௌத்த போதனைகளுக்கு அமைய, ஒத்துழைப்போடும், ஒன்றிணைந்தும் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வெசக் தின செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடு தற்சமயம் முகம்கொடுத்துள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண பௌத்த மதம் காட்டித்தந்துள்ள உரிய முகாமைத்துவ வழிகள் உதவும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன வெளியிட்டுள்ள வெசக் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.