கோப்பாய் பூதர்மடம் சந்தியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்திசையில் பயணித்த கார் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மற்றுமொருவர் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 8.00 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து அச்சுவேலி நோக்கி இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து பயணித்துள்ளது. பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிள் பயணித்துள்ளது. கோப்பாய் பூதர்மடச் சந்தியில் பேருந்தை முந்திச் செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் முயன்றுள்ளனர். இதன்போது எதிர்திசையில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த காருடன் அவர்கள் மோதுண்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். மற்றையவர் காயங்களுடன் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பேருந்துச் சாரதி மற்றும் கார் சாரதி இருவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.