இனப்பிரச்சினையை பொருளாதார நெருக்கடியிலிருந்து பிரித்து நோக்க முடியாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டை முன்னேற்றுவதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோருக்கும், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு போன்ற துறைகளை வழமையான முறையில் நடத்திச் செல்வதற்கும் நிதி ஒதுக்கீடு அவசியமாகும். பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை போன்ற நாட்டின் சொத்துக்கள் அதிகளவில் செலவிடப்படும் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் தேவைப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகம் ஒழுங்கு செய்திருந்த செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். பொருளாதாரக் கலந்துரையாடல் – சர்வதேச நாணய நிதியமும், அதனைத் தாண்டியும் என்ற தொனிப் பொருளில் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.