அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தால் திருக்கோவிலில் நேற்றுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்றவர்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் ஒளிப்படம் எடுத்தனர்.
இலங்கையின் சுதந்திர நாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி அன்றைய நாள் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியை வடக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. பேரணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சந்திப்புக்களை மாணவர் ஒன்றியம் நடத்தி வருகின்றது.
அம்பாறையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களை மாணவர் ஒன்றியத்தினர் நேற்றுச் சந்தித்ததுடன், அவர்களுடன் இணைந்து போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
‘கண்ணீருக்கு தடை விதிப்போரிடம் நல்லிணக்கத்தை எதிர்பார்க்கலாமா?’, ‘வேண்டாம் வேண்டாம் ஓ.எம்.பி. வேண்டாம்’, ‘வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும்’, ‘எங்கள் குருதியை உறிஞ்சினாய் எதுவரை எங்கள் கண்ணீரை உறிஞ்சுவாய்?’, ‘2லட்சம் பிச்சை வேண்டாம்’ ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாதைகளை போராட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.
TL