15 நாள்களுக்கு ரூ. 18 லட்சம் செலவு
அம்பலப்படுத்திய ஆர்.ரி.ஐ. தகவல்
வடக்கு மாகாண ஆளுநராக 2021 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பொறுப்பேற்றுக்கொண்டவர் ஜீவன் தியாகராஜா. இலங்கையிலுள்ள 9 மாகாணங்களின் ஆளுநர்களைவிடவும் பல தரப்புகளினதும் கவனத்தைப் பெறுபவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக இருப்பவர்களே. இந்த இரு மாகாணங்களும் கொழும்பு அரசின் ஆட்சியுடன் வேறுபடுபவையாக இருக்கின்றன. இதன் காரணமாக இந்த மாகாணங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்படுபவர்கள், கொழும்பின் தேவையை நிறைவுசெய்கின்றவர்க ளாக இருக்கும்போது அந்த மாகாணத்தவர்களுடன் முரண்பட வேண்டி ஏற்படும். வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பதவிக்கு வந்த காலத்தில், ஜீவன் தியாகராஜா பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளார்.
அவர் மாகாணத்தின் அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டிருந்தார். வடக்கிலுள்ள அதிகாரிகளுடனான உறவுநிலையும் சிறப்பாக இல்லை. தான் என்ன சொன்னாலும் அதை அதிகாரிகள் ஏன், எதற்கு என்ற கேள்விகேட்காமல், மறுபேச்சின்றி செய்யவேண்டும் என்பதுதான் அவரது நிலைப்பாடு. இத்தகைய ‘என்.ஜி.ஓ’ மனோநிலைதான் இன்றுவரையிலும் அவர் மீதான சர்ச்சைகள் பெருகுவதற்கு முக்கியமான காரணம்.
இப்படிப்பட்ட வடக்கு மாகாண ஆளுநரான ஜீவன் தியாகராஜா, நாடே கஞ்சிக்கு கெஞ்சிக்கொண்டிருக்கையில், மக்களின் வரிப்பணத்தில் இந்தியாவுக்கு ஓராண்டுக்கு முன்னர் சொகுசுச் சுற்றுலா சென்றுவந்திருக்கிறார். இது தொடர்பான தகவலைக்கூட வெளியிடுவதற்கு தயக்கம் காண்பித்த அவரது செயலக அதிகாரிகள், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் கட்டளையால் வேறுவழியின்றி இப்போதுதான் வெளியிட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் மே மாதம் 12ஆம் திகதி வரையிலான 15 நாள்கள் இந்தியாவுக்கான பயணத்தை வடக்கு மாகாண ஆளுநர் மேற்கொண்டிருந்தார். அவரது இந்தப் பயணம் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு அதே ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி, மின்னஞ்சல் ஊடாக தகவல் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தத் தகவல் கோரிக்கை கிடைக்கப்பெற்றதை தபால்மூலம் பதிலளித்து உறுதிப்படுத்தியது ஆளுநர் செயலகம். 14 வேலை நாள்கள் கடந்தும் பதில் கிடைக்கப்பெறாததைத் தொடர்ந்து ஆளுநர் செயலகத்துக்கான மேன்முறையீடு அதே ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரும் பதில் கிடைக்கப்பெறவில்லை என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அமைவாக அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் இதுகுறித்து முறைப்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆளுநர் செயலகம் சார்பில் குறித்தளிக்கப்பட்ட அலுவலரான ஆளுநரின் செயலர் பொ.வாகீசன் ஆணைக்குழுவின் அமர்வுக்கு முன்னிலையாக வேண்டியபோதும் அவர் சமுகமளிக்கவில்லை. அதேவேளை ஆளுநர் செயலகத்தின் தகவல் அலுவலரை, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அது வெற்றி யளிக்கவில்லை. ஆனால் அன்றைய ஆணைக்குழு அமர்வுக்கு முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால், தகவல் கோரிக்கையாளருக்குரிய பதில் அனுப் பப்பட்டதாகத் தெரிவித்து அதன் பிரதி ஆணைக்குழு வுக்கு அனுப்பப்பட்டது.
ஆணைக்குழு இது தொடர் பில் தகவல் கோரிக்கையாளரிடமும் வினவியி ருந்தது. ஆனால் அவ்வாறானதொரு பதில் கிடைக்கப்பெறவில்லை என்ற விடயம் ஆதாரங்களோடு ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் செயலகம் அனுப்பிவைத்துள்ள பதில் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்துமாறும் பணித்தது.
ஆளுநரின் செயலகத்திடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட பதிலானது, ‘வட்டுக்கோட்டைக்கு வழி என்ன என்று கேட்டால் துட்டுக்கு ரண்டு கொட்டைப்பாக்கு’ என்பதைப் போல கேட்டது என்னவோ, சொன்னது வேறென்னவோ என்ற பாணியில் இருந்தது.
இதோ வாசகர்களுக்காக, ஆளுநர் செயலகத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்-
கேள்வி: வடக்கு மாகாண ஆளுநர் இந்த ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது இந்தியப் பயணம் உத்தியோகபூர்வமானதா?
பதில்: ஆம், சனாதிபதி செயலகத்தில் முறையான அனுமதி பெறப்பட்ட உத்தியோகபூர்வமான பயணம்
கேள்வி: அவரது பயணத்துக்கான செலவு எவ்வளவு?
(விமான சிட்டை, தங்குமிடம். இந்தியாவில் போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட விரிவான அறிக்கை)
பதில்: நிதி அமைச்சின் M.F.01/2015/01 ஆம் இலக்க 2015.05.15 ஆம் திகதிய சுற்றறிக்கைக்கு அமைய (https://www.treasury.gov.lk/web/ministry-of-finance-circular/section/2015 எனும் இணைப்பிலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்) கொடுப்பனவுகள் யாவும் கொடுப்பனவு அதிகாரம் பெற்றவர்களால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கைக்கு உட்பட்ட வகையில் அப்போதிருக்கும் கட்டண அடிப்படையில் விமான பயணசீட்டுக்கான கட்டணம் ஒருநாளுக்கான இடைநேர் செலவுகள் படி ,நாளுக்கான இணைந்த படி என்பன மாத்திரம் பதினொரு கடமை நாள்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இந்தக்கொடுப்பனவுகள் 25.04.2022 ஆம் திகதியிலிருந்த அமெரிக்க டொலர் நாணய மாற்று விகிதத்தின்படி இலங்கை ரூபாவில் வழங்கப்பட்டிருந்தன.
கேள்வி: உத்தியோகபூர்வ பயணத்திற்கான நோக்கம்? பயணத்தின் போது ஆளுநர் சந்தித்தவர்களின் விவரங்கள்?
பதில்: இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசமைப்பின் அத்தியாயம் XVII 154 ஆ பிரிவின்படி ஜனாதிபதியே ஆளுநரை நியமனம் செய்கின்றார். 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச்சட்டம் பாகம் II இன் (அ) பிரிவின் பிரகாரம் சம்பந்தப்பட்ட ஆள் அத்தகைய வெளிவிடுகைக்கு எழுத்தில் சம்மதமளித்திருத்தல் வேண்டும். கௌரவ ஆளுநர் குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை
ஜனாதிபதி செயலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியமையால் தகவல் கோரிக்கையாளருக்கு குறித்த தகவல்களை முழுமையாக வழங்கமுடியவில்லை. குறித்த தகவல்களை ஜனாதிபதி செயலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் .
கேட்ட கேள்விக்குரிய பதிலை ஆளுநர் செயலகம் வழங்காமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீளவும் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு அது தொடர்பில் விசாரணை களை மேற்கொண்டது. இதன்போது வடக்கு ஆளுநரின் செயலர் பொ.வாகீசன் முன்னிலையாகியிருந்தார்.
ஆணைக்குழு, கேட்கப்பட்ட கேள்விகளுக்குரிய பதில் வழங்கப்படாமை தொடர்பில் ஆளுநரின் செயலரிடம் கேள்வி எழுப்பியது. இதன்போது ஆளுநரின் செயலர், வடக்கு மாகாண ஆளுநரே அவ்வாறு பதிலளிக்குமாறு பணித்ததாகக் குறிப்பிட்டார். இதனையடுத்து ஆளுநரின் செயலரிடம், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ச ஆகியோரது பயண விவரங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடான கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறு ஆணைக்குழு வழங்கிய கட்டளைகளைச் சுட்டிக்காட்டி , ’ஜனாதிபதியே தகவல் அளிக்கையில் ஆளுநர் பதிலளிக்காமல் நழுவமுடியாது. எனவே உடனடியாகப் பதில் வழங்குங்கள்’ எனத் தெரிவித்து அதனை ஆளுநரின் செயலர் ஏற்றுக்கொண்டு திருத்தப்பட்ட பதிலை வழங்கினார்.
அதில், இந்தியாவுக்கான பயணத்துக்கு ஜனாதிபதியின் செயலர் அனுமதி வழங்கியுள்ளதுடன் இந்தப் பயணம் உத்தியோகபூர்வமானது என்று ஆளுநரின் செயலர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 15 நாள்கள் பயணத்தில் 4 நாள்களை தனிப்பட்ட விடுமுறையாக ஆளுநர் எடுத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ பயணமாக வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்து வப்படுத்திச் சென்ற ஆளுநர் தனிப்பட்ட விடுமுறையையும் அதில் கழித்துள்ளார்.
மேலும் ஆளுநரின் இந்தியப் பயணத்துக்காக மக்களின் வரிப்பணமான 17 லட்சத்து 92 ஆயிரத்து 323 ரூபா 75 சதம் செலவிடப்பட்டுள்ளது.
இதில், இந்தியாவுக்கான இரு வழி விமானப் பயணத்துக்காக ஆளுநர் 68 ஆயிரத்து 126 ரூபா செலவிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வர்த்தக வகுப்பு பயணங்களுக்காகவே அவ்வாறானதொரு தொகை அறவிடப்பட்டிருந்தது.
மேலும் ஆளுநர் இந்தியாவில் மேற்கொண்ட உள்ளூர்ப் பயணம், ஹொட்டல் செலவு, உணவு என்பவற்றுக்காக இணைந்த கொடுப்பனவாக 14 லட்சத்து 51 ஆயிரத்து 956 ரூபாவும், அமையச் செலவாக 2 லட்சத்து 72 ஆயிரத்து 241 ரூபா 75 சதமும் வழங்கப்பட்டுள்ளது. இவை 11 நாள்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 4 நாள்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் ஆளுநரின் செயலர் பதிலளித்துள்ளார்.
‘இந்தியாவுடனான பொதுவான வர்த்தகச் சந்தைகள் தொடர்பாக விவாதிப்பதும் இலங்கையின் வளர்ச்சியில் பங்கேற்பதற்கும், உதவுவதற்கும் ஆர்வமுடைய முதலீட்டாளர்களை கண்டறிவதும், இலங்கை மக்களின் திறமைகளை மேம்படுத்துவதுடன் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை அறிதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக முறைமைகளை இருதரப்பாருக்கும் நன்மையளிக்கக்கூடிய விதத்தில் கலந்துரையாடல்களை நடத்துதல் ‘ என்பனவே ஆளுநரின் இந்தியப் பயணத்துக்கான நோக்கங்கள் என்று ஆளுநரின் செயலர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்தப் பயணத்தின்போது ஆளுநர் அங்குள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் இதன்போது இந்திய ஊடகங்களுக்கு நேர்காணலும் வழங்கியுள்ளார்.
ஆளுநர் தனது இந்தியாவுக்கான பயணத்தின்போது தமிழகம் தவிர்ந்த வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரையும் சந்தித்துள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதியுடன் ஆளுநர் பயணத்தை மேற்கொண்டு ஓராண்டு பூர்த்தி செய்யப்படும் நிலையில், அவரது இந்தியப் பயணத்தின் உத்தியோகபூர்வ நோக்கம் நிறைவேறியதா என்ற கேள்விக்கு செயற்பாட்டு ரீதியில் இல்லை என்பதே பதிலாகிறது. அவர் கூறியதைப்போன்று வடக்கு மாகாணத்துக்கு அவரது இந்தியப் பயணத்தால் இதுவரை நேரடி நன்மைகள் எதுவும் கிடைக்கவில்லை. சிலவேளைகளில் ஆளுநர் தனிப்பட்ட நலன்களை இந்தப் பயணத்தின் ஊடாக அடைந்தாரா என்பது தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட பணம் வீணடிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து வங்குரோத்தடைந்து மக்கள் இன்று துன்பப்படு வதற்கும், தற்போது அதிகரித்த வரிகளால் அல்லல்படுவதற்கும் இவ்வாறான வீணற்ற பயணங்களும், சொகுசு சுற்றுலாக்களும் ஒரு காரணமே.
ஓர் ஆளுநரின் ஒரு பயணத்துக்கே இவ்வளவு செலவு என்றால்…..?
TL