ந.லோகதயாளன்
யாழிலும் கிளியிலும் பல்லாயிரக் கணக்காண குடும்பங்கள் நிலமற்று இருக்கையில் பளையில் இராணுவத்திற்கு ஆயிரத்து 800 ஏக்கர் நிலம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம் சாட்டினார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியை இராணுவத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்தது. இதன்போதே சி.சிறிதரன் மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார்.
யாழ்ப்பாணத்தில் இன்றும் 14 ஆயிரம் பேருக்கும், கிளிநொச்சியில் 4 ஆயிரம் பேருக்கும் குடியிருக்க காணிகள் இல்லாத நிலையில், பளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இந்த காணிகளை இரு மாவட்டத்திலும் காணிகள் அற்ற அந்த குறிப்பிட்ட மக்களுக்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலருக்கும் கடிதம் எழுதிய போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
யாழ்ப்பாணம் பலாலியில் தனியாரின் 3500 ஏக்கர் காணியிலும் வட்டக்கச்சியிலும் இலங்கை இராணுவம் தோட்டம் செய்கின்றது. இவர்களால் இலங்கையின் போஷாக்கு மட்டம் அதிகரிக்கும,
கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக போர் முடிந்தும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு, கிழக்கிலே வாழ்கின்ற குழந்தைகள் போஷாக்கின்மையோடுதான் பிறந்திருக்கின்றார்கள், வாழ்ந்திருக்கின்றார்கள்.
இலங்கை அரசுகள் விதித்த மோசமான பொருளாதார தடைகளால்தான் தமிழர்கள் போஷாக்கற்றவர்களாக வாழ்ந்தார்கள். உரங்கள், எரிபொருட்கள், போஷாக்கு உணவுகள் அனுப்பப்படவில்லை.
இதனால் எத்தனையோ குழந்தைகள் போஷாக்கின்மையால், பட்டினியால் இறந்தார்கள்.
இந்தக் காலத்தைப்பற்றி சற்று சிந்தியுங்கள். திட்டமிட்டு தமிழர்கள் மீது இலங்கை அரசுகள் பொருளாதார தடைகளை விதித்தபோது எவ்வளவு தூரம் தமிழர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை இப்போது சிங்கள சகோதரர்கள் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
வடக்கில் கடலட்டை பண்ணைகள் என்ற பெயரில் சீனாவால் பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றனசீனாவின் இந்தச் செயற்பாடுகள் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகமாக மக்களைப் பாதிக்கின்றன.
அழிக்கப்பட்டுள்ள, படுகொலைசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் தொடர்பில் ஜெனிவாவில் பிரேரணை வருகின்றபோது இலங்கைக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருக்கும் சீனா இன்னொரு புறத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற தமிழ் இளைஞர்களின் கல்விக்குத் தான் 5 ஆயிரம் ரூபா பணம் கொடுப்பதை பெரிய விடயமாகக் காட்டுகின்றது. மீனவர்களுக்கு 4 ஆயிரம் ரூபா கொடுப்பதை பெரிய செய்தியாக்குகின்றது. ஆனால், நாம் செத்துக்கொண்டிருக்கின்றோம்.
நாம் போஷாக்கின்மையாலும் சாகின்றோம். வாழ்வாதாரமின்றியும் சாகின்றோம். எங்களின் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கின்றது.
இலங்கையின் அமைதியின்மையில் சீனாவின் மறைக்கரங்கள் இன்னும் இன்னும் அகோரமாக இருக்கின்றது. இது மிகவும் மோசமானது என்றார்.
TL