மக்களுக்குத் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பது அரசாங்கத்தின் இலக்கு என்கிறார் எரிசக்தி அமைச்சர்

நாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு போதுமான அளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருளை முகாமைத்துவம் செய்து பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். இந்திய கடனுதவியின் கீழ், இலங்கைக்குக் கிடைக்கும் இறுதி டீசல் தொகையை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும்.
மசகு எண்ணெய் பெறுவது பற்றி ரஷ்ய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதற்கு இலங்கைக்கான ரஷ்ய தூதுவராலயம் ஒத்துழைப்பு வழங்குகிறது. எரிபொருள் விநியோகம் பற்றி பல்வேறு தரப்புகளிடமிருந்து 110 யோசனைகள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அந்த யோசனைகளை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்ற போதிலும், குறிப்பிட்ட தொகையினருக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க முடியும். ஆகவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை தவிர்க்குமாறும் அமைச்சர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். நாட்டிற்குத் தேவையான பெற்றோல் மற்றும் டீசலை கொள்வனவு செய்வதற்கு மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வங்கியின் கடன் ஆவணத்தை வெளியிட்டு, அந்த நிறுவனங்கள் பெற்றோலையும், டீசலையும் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. அவசர முகாமைத்துவப் பணிகளுக்காக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் 70 தினங்கள் மூடப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறினார்.
