மற்றுமொரு தொகை எரிபொருள் இலங்கைக்கு விரைவில் கிடைக்க இருக்கின்றது

மண்ணெண்ணெயின் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நேரடியாக நிதி உதவியை வழங்கும் தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்த யோசனையாகும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கோடு இந்தத் தீரு;மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு அமைச்சர் மனோ கணேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டிற்கு மற்றுமொரு தொகை எரிபொருள் விரைவில் கிடைக்கவிருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். 30 ஆயிரம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இன்று தரையிறக்கப்பட இருக்கின்றது. ஒட்டோ டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ளது. ஒக்ரைன் 92 வகை பெற்றோலை ஏற்றிய கப்பலும் இலங்கை வரவிருப்பதாக அமைச்சர் கூறினார்.
அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு இடையூறு ஏற்படமாட்டாது என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு அரசாங்கம் எந்தவித இடையூறுகளையும் மேற்கொள்வதில்லை என்று அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர்களின் உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபையில் ஒன்பது உறுப்பினர்கள் கூட்டாக எழுதியுள்ள கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஜனநாயக ரீதியாக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு மதிப்பளிக்கமாறு இந்தக் கடிதத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
