Home Against Government மஹிந்தவின் அடிவருடிகளின் ஏவல்களுக்கு எடுபட்டு தமிழ் இளைஞர்கள் யாரும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது -நிஷாந்தன்

மஹிந்தவின் அடிவருடிகளின் ஏவல்களுக்கு எடுபட்டு தமிழ் இளைஞர்கள் யாரும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது -நிஷாந்தன்

Source

மஹிந்தவின் அடிவருடிகளின் ஏவல்களுக்கு எடுபட்டு தமிழ் இளைஞர்கள் யாரும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஒரு மாத காலமாக இலங்கையின் தலைநகர் கொழும்பில் ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் அணிதிரண்டு ராஜபக்ஷக்களை ஆட்சியில் இருந்து அகற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத ராஜபக்ஷ தரப்பினர் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியதன் காரணமாக அங்கு பாரிய கலகங்கள் ஏற்பட்டுள்ளன.

அமைதி வழியில் போராடி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இதற்கு மேல் பொறுக்க முடியாத சூழ்நிலையில் கலகக்காரர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை நிபந்தனையோடு மூன்று நாட்களாக வன்முறையில் இறங்கியுள்ளனர்.

பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி சென்று திருகோணமலையில் வந்து பதுங்கியிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் வடக்கு – கிழக்கு பிரதேசத்திலுள்ள எட்டு மாவட்டங்களிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களில் யாரும் ஈடுபடவில்லை.

இந்நிலையில் தென்னிலங்கையிலுள்ள ஒரு இனவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு சில வழிகளில் தொடர்புகளை ஏற்படுத்தி வடக்கு- கிழக்கு இளைஞர்களை வன்முறைகளில் ஈடுபடத் தூண்டியுள்ளனர்.

இது தொடர்பில் சில இளைஞர்கள் எமக்குத் தொடர்புகளை ஏற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளனர்.

அவர்களிடம் எந்த விதமான வன்முறைகளிலும் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என நாம் அறிவுரை கூறியுள்ளோம். அத்தோடு இந்த விடயங்களில் நாங்கள் அமைதியாக இருந்து பொறுமை காக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலக பதாகைக்கு தீ வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அவருடைய உத்தியோகபூர்வ முகப்புத்தகத்திலும் டுவிட்டரிலும் ஒரு அறிக்கையை பார்க்கக்கூடியதாக இருந்தது.

ஆனால் இவர் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவின் அடிவருடியாக இருந்தவர். டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், சதாசிவம் வியாழேந்திரன் போன்றவர்கள் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்பு நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தவர்கள்.

ஆனால் மஹிந்த பதவி விலகியவுடன் இவர்களுடைய உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களைப் பார்க்கையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பது போன்றும், அரசாங்கத்தில் இருந்து முற்றாக விலகியவர்கள் போன்றும் தமிழ்த் தேசியம் மீது பற்றுக் கொண்டவர்களாகவும் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

இப்போதுதான் இந்த அடிவருடிகளுக்கு தமிழர்களின் வீரம் தெரிகிறது. இவர்களின் கடந்த கால வரலாறுகள் எல்லாம் எங்களிடம் அப்படியே இருக்கின்றன.

ஆகவே எமது வடக்கு-கிழக்கு இளைஞர்கள் இந்த மஹிந்த தரப்பு அடிவருடிகளுடன் எந்தவிதமான இணக்கப்பாட்டுக்கும் சென்று வன்முறைகளில் ஈடுபடக்கூடாது என்பதை வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனெனில் இவர்களுடைய இறுதிக் காலம் வந்துவிட்டது. இன்னும் ஆறு மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தல் வர இருக்கின்றது.

இவர்களுடைய சகல விடயங்களையும் நாங்கள் மக்களுக்கு வெளிப்படுத்துவோம். அப்போது எமது இளைஞர்கள், மக்கள் அனைவரும் அணிதிரண்டு தமிழ் அரசியல் பரப்பிலிருந்தே இந்த அடிவருடிகளை அகற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

AR

The post மஹிந்தவின் அடிவருடிகளின் ஏவல்களுக்கு எடுபட்டு தமிழ் இளைஞர்கள் யாரும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது -நிஷாந்தன் appeared first on LNW Tamil.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image