சிறுவர் இல்ல அலுவலகம்;
நேற்றுமாலை அடித்துடைப்பு
திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்ல விடுதி நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், நிர்வாகத்துக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய விடுதியின் முகாமையாளரை பதவி விலக்கும் உத்தரவை சிறுவர் நீதிமன்றம் வழங்கியது. இதன் எதிரொலியாக , சைவ வித்தியா விருத்திச்சங்கத்தின் நிர்வாக அலுவலகம் சிறுவர் இல்ல மாணவர்கள் சிலரால் அடித்து உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுவர் இல்லத்திலிருந்து 3 மாணவர்கள் கடந்த 8 ஆம் திகதி தப்பியோடியிருந்தனர். இவர்கள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டனர். விடுதியின் முகாமையாளரால் தாக்கப்பட்டமையாலேயே தப்பி ஓடியதாக அவர்கள் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். நிர்வாகத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக, தப்பியோடிய 3 சிறுவர்களில் ஒரு சிறுவனின் பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த 20ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தனர்.
இதையடுத்து கோப்பாய் பொலிஸார் 21ஆம், 22ஆம், 23ஆம் திகதிகளில் முகாமையாளரை பொலிஸ் நிலையம் அழைத்து காலை 10 மணியிலிருந்து பி.ப. 3 மணி வரை காக்க வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 23ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ், தனது வழமையான சோதனை நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் அவர் ஆராய்ந்துள்ளார். சிறுவர் துஷ்பிரயோக வழக்குத் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டவுடன் சிறுவனை ஏன் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தவில்லை என்றும், சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தாமல் 4 நாள்கள் இழுத்தடித்தமை ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து கோப்பாய் பொலிஸார் சிறுவனை யாழ். போதனா மருத்துவமனையின் சட்டமருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தியுள்ளனர். அத்துடன் முகாமையாளரைக் கைது செய்து கடந்த 24ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கோரியுள்ளனர். ஆனால் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிவான் சந்தேகநபரான முகாமையாளரை பிணையில் விடுவித்துள்ளார்.
இதற்கிடையில் சைவ வித்தியா விருத்திச்சங்கத்தின் நிர்வாகத்தால், அதன் செயலரால் மேற்படி முகாமையாளரை வழக்கு நடவடிக்கைகள் முடிவடையும் வரையில் பணி இடைநிறுத்தும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் அவருக்கு பதிவுத் தபாலில் வீட்டுக்கு அனுப்பப்பட்டதுடன் ஒரு பிரதி சங்கத்தின் தலைவரால் நேரடியாக முகாமையாளரிடம் அவரது அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முகாமையாளர், வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்துக்கு மேன்முறையீடு செய்துள்ளார். சங்கத்தின் தலைவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில், ’சிறுவர் இல்ல சிறுவர்களை தனது வீட்டில் வேலையில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. ஆனாலும், தலைவர் அதே பதவியில் தொடரும் நிலையில் எவ்வாறு தன்னை பதவி நீக்கம் செய்ய முடியும்?’ என்று மேன்முறையீட்டு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேன்முறையீட்டுக்கு பதிலளித்த வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், ’யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முகாமையாளருக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் முகாமையாளராகப் பதவியைத் தொடர்வதற்கு நீதிவான் நீதிமன்றில் இடைக்காலத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்புக் கிடைக்கும் வரையில் அவரை பதவி நீக்கவேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சிறுவர் நீதிமன்றில் சைவ வித்தியா விருத்திச்சங்கத்தால், மேற்படி முகாமையாளருக்கு பதவி விலகல் கடிதம் வழங்கப்பட்ட பின்னரும் அலுவலகத்துக்கு வருவதாகவும், அவர் அவ்வாறு வருவதானது அவருக்கு எதிரான வழக்கில் சாட்சிகளை கலைப்பதற்கு உதவும் என்பதாலும் வழக்கு முடிவடையும் வரையில் பதவியில் தொடர இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரப்பட்டது. அதற்கு அமைவாக சிறுவர் நீதிமன்றால், முகாமையாளருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தகவல் சிறுவர் இல்லச் சிறுவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறி அருகிலிருந்த நிர்வாகக் கட்டத்தை சேதப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சங்க நிர்வாகத்தின் செயலர் கருத்துத் தெரிவிக்கையில், மேற்படி முகாமையாளரே விடுதிக் காப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். அவர் சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட பொருள்களை வெளியில் விற்பனை செய்துள்ளார். சிறுவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார். மின்அழுத்தியால் சிறுவர்களுக்கு சூடு வைத்துள்ளார். இது தொடர்பில் சிறுவர்கள் எங்களுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். அது தொடர்பில் விசாரணை நடைபெறுவதால் அதற்காகவே அவரை பதவியிலிருந்து இடைநிறுத்தும் கடிதம் வழங்கியிருந்தோம். அவரைப் பதவியிலிருந்து இடைநிறுத்தினால், கட்டடங்களுக்கு சேதம் விளைவிப்போம் என்று சிறுவர் இல்லத்தில் மேற்படி முகாமையாளரால் தூண்டப்பட்ட மாணவர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அவர்கள்தான் இந்தத் தாக்குதல்களைச் செய்திருக்கவேண்டும். மேலும் எமது சங்கத்துக்கு உட்பட்ட 3 சிறுவர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. ஏனைய 2 சிறுவர் இல்லங்களிலும் எதுவித பிரச்சினையும் இல்லை. இந்தச் சிறுவர் இல்லத்துக்குப் பொறுப்பான சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தருக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் சிறு முரண்பாடு உள்ளது. அதனை முகாமையாளர் தனக்குச் சார்பாகப் பயன்படுத்தியிருந்தார், என்றார்.
TL