முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்

தொழில்சார் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு வாராந்தம் வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிப்பது பற்றி கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த ஐந்து வாரங்களில் பொலிஸ் நிலைய, உள்ளராட்சி மன்ற மட்டங்களில் முச்சக்கர வண்டிகளை பதிவுசெய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். இதன் கீழ் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு எந்தவொரு எரிபொருள் நிரப்பகத்தில் இருந்தும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் கூறினார். முச்சக்கர வண்டிகளுக்கு ஒருவாரத்திற்கென வழங்கப்படும் எரிபொருள் போதுமானதாக இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கூற்றுக்கு அமைச்சர் கஞ்சன விஜயசேகர நேற்று பாராளுமன்றத்தில் பதிலளித்து உரையாற்றினார்.
