Home » முல்லைத்தீவில் மனித எச்சங்கள்: மற்றுமொரு மனித புதை குழியா என மக்கள் அச்சம் 

முல்லைத்தீவில் மனித எச்சங்கள்: மற்றுமொரு மனித புதை குழியா என மக்கள் அச்சம் 

Source

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ள நிலையில், போரினால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்று ஒரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீர்வழங்கலுக்கான குழாய்களை பொருத்தப்படுவதற்காக வேலைகள் இடம்பெற்றுகொண்டிருந்த போதே இவை காணப்பட்டன. 

“இங்கு ஒன்றோ அல்லது இரண்டோ இல்லை, அதைவிட கூடுதலாக காண முடிந்தது” என்று வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். 

இந்த மனித எச்சங்கள் நேற்று வியாழக்கிழமை (29) கொக்குத்தொடுவாய் மத்தியில் அமைந்துள்ள பாடசாலையிலிருந்து கொக்கிளாயை நோக்கி சுமார் 200 மீட்டர் தொலைவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் வழங்கலுக்கான குழாய் பொருத்துவதற்காக தோண்டிய குழியிலேயே இவை காணப்பட்டுள்ளன.

மனித புதை குழிகள் தொடர்பில் அண்மையில் ஐந்து மனித உரிமை அமைப்புகள் இணைந்து வெளியிட்ட கடுமையான அறிக்கையின் அதிர்ச்சியிலிருந்து நாடு இன்னும் மீளாத நிலையில் இந்த மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

இந்த புதை குழி காணப்பட்டவுடன் கொக்கிளாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்கு தகவல் தெரிவித்ததாகவும், உடனடியாக தான் அங்கு சென்றதாகவும் துரைராசா ரவிகரன் கூறினார்.

இவ்வாறு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் கொக்கிளாய் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இது தொடர்பில் முல்லைத்தீவு நீதவானின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளததாக பொலிஸார் கூறுகின்றனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பு கூறுகிறது. 

“அந்த இடத்தை பார்வையிட நான் அனுமதிக்கப்பட்டேன். அங்கு உடைகளின் சில பகுதிகளும், எலும்புக்கூடுகளும் காணப்பட்டன. உடைகளில் பெண்களின் ஆடைகளும் இருந்தன. அவற்றை காணும்போது அவை விடுதலைப் புலிகளுடையதாக இருக்கக் கூடும் என எனக்கு தோன்றுகிறது. 2-3 மீட்டர் அளவிலான பகுதியில் அந்த உடல் எச்சங்கள் காணப்பட்டன. அந்த எலும்புகூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டது போலத் தெரிகிறது” என துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார். 

இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் முல்லைத்தீவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  எனினும் இந்த இடம் ‘மாவீரர் துயிலும் இல்லம் இல்லை’ என்பதை உறுதியாக கூற முடியும் என அவர் தெரிவித்தார். 

“இந்த பகுதியிலிருந்த மக்கள் 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரம் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் 2011ஆம் ஆண்டே மீள்குடியமர்த்தப்பட்டனர். மேலதிகமாக தோண்டப்படும் போதும் கூடுதல் உடல் எச்சங்கள் கிடைக்கலாம்”. 

மிகவும் கொடூரமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் 2009 ஆண்டு மே மாதம்19ஆம் திகதி ரத்தக்களறியுடன் முடிவடைந்த நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரச படையினரிடம் சரணடைந்தனர், அல்லது கையளிக்கப்பட்டனர் அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். 

அவர்களை கண்டுபிடிக்க ஒரு அலுவலகம் 2016ஆம் ஆண்டு நாடாளுமன்ற தீர்மானம் ஒன்றின் மூலம் அமைக்கப்பட்டாலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் அந்த அலுவலகம் இதுவரை அவ்வகையில் காணாமல்போன ஒருவரைக் கூட கண்டுபிடிக்கவில்லை.  அந்த அலுவலகமும் ஐ நா மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளரின் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் தொடர்பான நிலை குறித்த தனது வாய்மொழியான அறிக்கையில் பிரதி ஆணையாளர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை குறை கூறியிருந்தார். 

இதேவேளை பிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை அளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் தென்னாபிரிக்கா போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு  ஒன்று அமைக்கப்படுவதாகவும், போர் குற்றங்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த அமைப்பு விசாரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அந்த ஆணைக்குழுவில் சர்வதேச மேற்பார்வையாளர்களும் உள்ளடங்குவார்கள் ரணில் கூறியுள்ளார். 

ஆனால் மனித உரிமை செயற்பாட்டாளர்களோ, விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட யுத்தம் மற்றும் கடந்த 1980களில் சிங்கள இளைஞர்களின் எழுச்சியை ஒடுக்கியபோது இடம்பெற்ற பாரிய குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை மூடி மறைக்கவே இந்த ஆணைக்குழு அமைக்கப்படுகிறது என அஞ்சுகின்றனர். 

இப்போது கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இது தமது உறவுகளை தேடுபவர்களின் அச்சத்தையும் கவலையையும் மேலோங்கச் செய்துள்ளது. கடந்த 2,300 நாட்களுக்கு மேலாக பெண்கள் தலைமையிலான அமைதிவழி போராட்டம் தமது சொந்தங்களை தேடி தொடர்ச்சியாக நடைபெறுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்ற ஒற்றை பதிலைக் கோரியே அந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இவ்வாறு மனித எச்சங்களை தென்படுவதான செய்தி பரவியதும் உறவுகளை தேடி அலையும் உறவினர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

AR

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image