Home » யாழின் சுகாதாரம் சீர்கெட காரணம்  யார்?.

யாழின் சுகாதாரம் சீர்கெட காரணம்  யார்?.

Source

ந. லோகதயாளன்

வடக்கின் ஒரேயொரு மாநகர சபையான யாழ்ப்பாணம் மாநகர சபை தற்போதுவரை  போதிய சுத்திகரிப்பு இன்றி காணப்படும் நிலையில்  இரகசிய  தீர்மானத்தினால்  கூட்டமைப்பின் காலத்தில் கிடைத்த 4 கொம்பக் வாகன அனுமதி  வி.மணிவண்ணன்  காலத்தில் கை நழுவிப் போகின்றமை ஆவண ரீதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

யப்பான் அரசினால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு வழங்க இணக்கம் தெரிவித்த 4 கொம்பக்ரர் வாகனங்கள் தற்போது கிடைக்காமல் போகும் நிலை காணப்படுகின்றமை தொடர்பிலான ஆவணங்கள் ரீதியிலான  பார்வை இங்கே தரப்படுகின்றது.

மீள்சுழற்சி செய்யப்பட்ட உபகரண கையகப்படுத்தல் ஒப்பந்த திட்டத்தின் கீழ்
மறுசீரமைக்கப்பட்ட  கழிவுகளை சேகரிக்கும் நான்கு பாரவூர்திகளை இறக்குமதி செய்வதற்குரிய  அனுமதி பெறப்படாத  காரணத்தினால் இந்த  திட்டத்தில் இருந்து வெளியேறுவதாக யப்பானியத் தூதரகம் 4 ஆண்டுகளின் பின்னால்  2022-07-29 அன்று யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு  எழுத்தில் அறிவித்துள்ளது.

  முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட்டின் காலத்தில்
கழிவுகளை அகற்றும். நான்கு டிப்பர் வகை  (கொம்பக்) வாகனங்களை வழங்குமாறு ஜப்பானிய தூதரகத்திடம்
கோரிக்கை விடப்பட்டது.

இதற்கு இணங்கிய யப்பான் தூதரகம்  4 வாகனங்களையும் இறக்குமதி செய்வது தொடர்பாக 2019-03 -19 இல் ஓர் ஒப்பந்தமும் மேற்கொண்டு இதற்கான பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அந்த 4 வாகனங்களையும் இலங்கைக்குள் கொண்டு வரும்போது  கணிக்கப்பட்ட பெறுமதிக்காக இலங்கை அரசிற்கு செலுத்த வேண்டிய சுங்கத் தீர்வையாக ஒரு கோடியே 43 லட்சத்து 29 ஆயிரத்து 446 ரூபா அல்லது 83 ஆயிரத்து 432 அமெரிக்க டொலரை  செலுத்த வேண்டும் எனவும்  கண்டறியப்பட்டபோது அந்த தொகையினையும் யப்பானியத் தூதரகம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நன்கொடையாக

வழங்கியது.

இந்தப் பணத்தை மாநகர சபை 2019-03-28 அன்று தனியான ஓர் கணக்கில் வைப்பிலிடப்பட்டது.

இந்த திட்டம் அனுமதிக்கும்போது இ.ஆனல்ட் முதல்வராக இருந்த காலத்தில் சகரான் குண்டு வெடிப்பு, கொரோனாத் தாக்கத்தின் மத்தியில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சில முன்னெடுப்புக்கள் மேற்கொண்டபோதும் நிர்வாக நடவடிக்கைகளில் மாநகர சபை கையாண்ட நடவடிக்கைகளில் தவறு இருப்பதாகவும் அனுமதி வழங்க வேண்டிய திணைக்களங்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் வாகனத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இருந்தபோதும் 2019-06-12  அன்று இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு அனுமதி கோரி முன்னாள் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதேபோன்று 2019-06-18 அன்று அனுமதிச் சான்றிதழிற்கான விண்ணப்பத்தையும் சமர்ப்பித்துள்ளது.

இதன்பின்பு 2019-11-14 அன்று ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபா செலுத்தி இறக்குமதிச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இது 3 மாதம் மட்டுமே வலுவானது ஆனாலும் அக் காலத்தில் பெறப்படவேண்டிய மற்றுமோர் அனுமதியான
E.R.D அனுமதி என்னும் (எக்சேரனல்  றுசோஸ் டிப்பாட்மன்) வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அனுமதியை பெறுவதிலேயே மாநகர சபை நெருக்கடியை எதிர்கொண்டது.  இதற்காக 2020-06-15 இல் இந்த வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு முன்னாள் முதல்வர்  கடிதம் அனுப்பிய அதே நேரம் 2019-11-14 அன்று இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திடம்
பெற்ற அனுமதியை கால நீடிப்புச் செய்து தருமாறும்  2020-11-02இல் மாநகர சபையால் அதே இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதேநேரம் 2020-11-02இல் மாநகர சபையால் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு  அனுப்பிய கடிதம் தொடர்பில் பதில் ஏதும் வரவும் இல்லை

இக் காலப் பகுதியில் ஏற்பட்ட தடைகளை நீக்க முன்னாள் முதல்வர்
2020-06-30 அன்று திறைசேரிக்கு ஓர் கடிதத்தை எழுதியுள்ளார் அதாவது எம்மிடம் உள்ள பணத்தை நீங்கள் பெற்றுக்கொண்டு அந்த வாகனங்களைப் பெற்றுத் தாருங்கள் என்றும் எழுத்தில் கோரிக்கை விடப்பட்டது.

இக்காலத்தில்  திறைசேரி மாநகர சபைக்கு 2020-07-08 இல் நீங்கள் தவறான திணைக்களத்திற்கு கடிதம் எழுதியுள்ளீர்கள் என பதில் அனுப்பி பிரதியை உரிய திணைக்களத்திற்கும் அனுப்பியுள்ளது. அதேபோன்று 2020-12-02 திகதியில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களமும் பதிலளித்துள்ளது.

வி.மணிவண்ணன் காலம்.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தற்போதைய முதல்வரான வி.மணிவண்ணன் பதவியேற்ற நிலையில் இதற்கு விசேட  அமைச்சரவை அனுமதி பெற்றால்  மட்டுமே வாகனத்தை தருவிக்க முடியும்  எனவும் கூறப்பட்டதனால் 2021-11-19 அன்று  அமைச்சரவை அனுமதிக்காக  அமைச்சர் டகளஸ் தேவானாந்தாவிற்கு சபையால்  ஓர் கடிதம் எழுதப்பட்டுள்ளது.  2022 ஆம் ஆண்டின் ஆரம்ப காலம் வரையில் நிதி அமைச்சின் கீழ் உள்ள E.R.D அனுமதி என்னும் (எக்சேரனல்  றுசோஸ் டிப்பாட்மன்) வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அனுமதியை மாநகர சபையால்  பெறப்படவேயில்லை.

இக் காலத்தில் 2022-05-05 அன்று தற்போதைய முதல்வரான வி.மணிவண்ணனின் காலத்தில் ஆணையாளரால்  யப்பானியத் தூதரகத்திற்கு அனுப்பிய கடித்த்தில் பல காரணங்களை குறிப்பிட்டு தீர்மானம் என அடுப்பிய கடிதமே மாநகர சபைக்கு பாதகமாக அமைந்துள்ளது.

இவ்வாறு 2022-05-05 ஆம் திகதிய  கடிதத்திற்கு பதிலளித்து 2022-07-29 அன்று யப்பானியத் தூதரகம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு அனுப்பிய கடிதத்தில் மாநகர சபையின் கடிதத்தின்பால்  திட்டத்தை இரத்துச் செய்வதாகவும் தம்மால் வழங்கிய பணத்தை மீள ஒப்படைக்குமாறும் கோரியுள்ளனர்.

நானகு  ஆண்டுகளாக மாநகர சபையின் முயற்சிக்குள் இருந்த விடயத்தினை மூடி பணத்தையும் மீளக் கையளிக்குமாறு யப்பான் தூதரகம் கோரியதற்கு 2022-05-05 அன்று யாழ்ப்பாணம் மாநகர சபை  ஆணையாளர்  எழுதிய கடிதமே அடிப்படையாக அமைந்துள்ளது. அந்த கடிதத்தில் இத் திட்டம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால் எம்மால் மேலதிகமாக இதர கொடையாளிகளிடம் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கவும் எந்த அறிகுறியும் இல்லை.

இதனால் இத் திட்டத்தை இரத்துச் செய்து பெறப்பட்ட நிதியை யப்பானிய தூதரகத்திடம் திருப்பியளிக்க முடிவு செய்துள்ளோம். எனக் குறிப்பிட்டுள்ளார். இதுவே பாதகமாக அமைந்துள்ளது.

இந்த கடிதம் வழங்கிய பின்பு  4 மாதக் கூட்டங்களும் பணத்தை மீளத் தருமாறு யப்பான் தூதரகம் கோரிய பின்பு ஒரு மாதக் கூட்டமும் யாழ்ப்பாணம்  மாநகர சபையில் இடம்பெற்றபோதும் மாநகர சபையில் எந்தவொரு விடயமும் சாதாரண அறிவித்தலாக ஏனும் தெரிவிக்கப்படவில்லை என்பதோடு உறுப்பினர்கள் அனைவருக்கும் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

அதாவது மாநகர முதல்வரும் ஆணையாளரும் மட்டுமே எடுத்த அந்த இரகசிய தீர்பானமே யப்பான் தூதரகத்தின் 2022-07-29 ஆம் திகதிய கடிதத்திற்கு அத்திவாரமாக அமைந்துள்ளமை ஆவண ரீதியில் நிரூபணமாகியுள்ளது.

யப்பான் தூதரகமே இவ்வாறு கடிதம் எழுதுமாறு தூண்டியதாக சிலர்கூற முற்பட்டால் இது யாழ்ப்பாணம் மாநகர சபையா அல்லது யப்பான் மாநகர சபையா என்ற கேள்வியும் எழும்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றலிற்காக வருடாந்தம் 10ற்கும் மேற்பட்ட  உழவு இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்தி பெரும் தொகை செலவு செய்யும் நிலையில் கையில் கிடைத்த தோண்டியை கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்ற நிலவரத்தில் மாநகர சபையின் தற்போதைய நிர்வாகம் செயலபட்டுள்ளது.
TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image