Home » ரணிலின் லண்டன் பேச்சும் தமிழ் தரப்பினரின் நிலைப்பாடும்

ரணிலின் லண்டன் பேச்சும் தமிழ் தரப்பினரின் நிலைப்பாடும்

Source
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் கனடாவின் முன்னாள் பிரதமரும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் தலைவருமான ஸ்ரீபன் ஹூப்பருக்கு வழங்கிய கேள்வி – பதில் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் பலர் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் தெரிவித்த கருத்துக்களில் ஓரளவு உண்மை உள்ளது. அவர் குறிப்பிடத்தக்களவு விடயங்களைச் செய்தும் இருக்கின்றார். இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது, ரணில் விக்கிரமசிங்க கூறியதில் ஓரளவு உண்மை உள்ளது. அவர் குறிப்பிட்ட விடயங்களில் சிறிய முன்னேற்றம் உண்டு. அவர் இங்கு இவ்வாறு செய்வது சர்வதேச சமூகத்திடமிருந்து தனக்கு நன்மைகளைப் பெறுவதற்காகத்தான் செய்கின்றாரா என்பது தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் பேசியிருக்கின்றார். 13 இலிருந்து பிடுங்கப்பட்ட அதிகாரங்களை மீளளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் விடயங்கள் நடக்கின்றன. வன உயிரிகள் திணைக்களம், வன வளத் திணைக்களம் என்பன ஆக்கிரமித்த காணிகளை 1985ஆம் ஆண்டுக்கு முந்தையை நிலைமையை வைத்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்துக்கு வடக்கு  கிழக்கில் தேவையற்று காணிகளை ஆக்கிரமிக்கவேண்டாம் என்று ஜனாதிபதி கூறியிருந்தார். அது நடைமுறையாகி வருகின்றது. அஸ்கிரி மகாநாயக்க தேரர், ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துகின்றீர்கள் என்று கேட்பதிலிருந்து இந்த விடயம் உறுதியாகின்றது. சில விடயங்களை செய்தது என்பது உண்மை. அது எங்களுக்கு எப்படி நன்மைகளைப் பெற்றுத்தரும் என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அரசியல் கைதிகள் 10 பேரை விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் கூறியிருந்தார். இதுதான் தற்போதைய  நிலைமை, என்றார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவரும் ஊடகப் பேச்சாளருமான  சுரேஷ பிரேமசந்திரன் தமது கட்சி நிலைப்பாடு தொடர்பில் தெரிவிக்கையில், ரணிலுடன் பேச்சுக்கு சென்ற சம்பந்தன் ரணில்  ஏமாற்றியதாகச் சொன்னார். ஆனால் ரணில் அதை எப்படிப் பயன்படுத்தியிருக்கின்றார் என்பது லண்டன் பேச்சில் தெரிகிறது. காணி பிரச்சினை தீர்க்கப்பட்டதாக வீரவசனம் பேசியிருக்கின்றார். ஆனால் இங்கே குருந்தூர், திரியாய என்று புதிதாக காணிப் பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வெறும் கண்துடைப்பே. ஜூலைக்கு முன்னர் தீர்வு வழங்குவது நல்ல விடயம். ஆனால் அதற்குரிய எந்தவொரு  அறிகுறிகளும் இங்கே  தென்படவில்லை என்றார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மற்றுமோர்  இணைத்தலைவரான  நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில், அரசியல் கைதிகள் விடயத்தில் மாத்திரம் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காணி விவகாரத்தில் தொல்பொருள் திணைக்களம் ஊடாகப் புதிதாக பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அரசியல் தீர்வு தொடர்பில் முடிவெடுக்கப்படவில்லை. முன்னைய ஜனாதிபதி கோத்தாபாய  தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசவில்லை. இவர் பேசினாலும் முடிவுகள் எடுக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளாலேயே நிராகரிக்கப்பட்டதொன்று, என்றார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான  நாடாளுமன் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் இருக்கின்றது. மக்கள் அதனை நிராகரித்துள்ளனர். காணி விடுவிப்பில் எதுவும் நடக்கவில்லை. ரணிலுடன் நடந்த பேச்சுக்களில் எந்தப் பிரயோசனமும் இல்லை. சர்வதேச சமூகத்தை ஈர்ப்பதற்காகவே அவர்  பொய்யுரைத்துள்ளார் என்கின்றார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், காலக்கெடுக்களைக்கூறி தீர்வு வரும் என்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகின்றார். இலங்கையிலுள்ள தலைவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மாட்டார்கள். காணிகளை விடுவிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் காணிகளை விடுவிப்பதற்கான எந்தவொரு ஆயத்தங்களையும் காணவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் பணியம் தோல்வியடைந்து. அடுத்த ஏமாற்றுக்காக உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்க முயல்வதாகக் கூறுகின்றார்கள். சர்வதேச சமூகம் இலங்கைத் தலைவர்கள் சொல்வதை நம்பக்கூடாது. உண்மையை நேரில் வந்து அறிந்துகொள்ள வேண்டும். ஜனாதிபதி ரணிலின் கருத்தைக் கண்டிக்கின்றேன் என்றார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழர் தாயகத்தில் பௌத்த – சிங்கள மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவற்றை மூடி மறைப்பதற்கு தமிழ் மக்கள் தன்னுடன் உள்ளார்கள் என்று காண்பிப்பதற்கு தமிழ்ப் பிரதிநிகளுடன் பேச்சு நாடகத்தை நடத்துகின்றார். அதை சர்வதேச சமூகத்தின் முன்பாக வைத்து தன்னை நியாயப்படுத்துகிறார். ரணில் விக்கிரமசிங்க பொய் சொல்வார் என்பதில் ஆச்சரியமில்லை. அவர் கூறும் பொய்யை உண்மையாக்குவதற்கு எமது தாயகத்திலுள்ள தமிழ் தரப்புக்கள் தொடர்ந்து அவருக்கு முட்டுக்கொடுக்கின்றன என்பதுதான் துரதிஷ்டவசமானது. காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தை அதனுடன் தொடர்புடைய தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தப் பணியகத்தின் வெற்றிடங்களைக்கூட பூர்த்தி செய்வதற்கு இவர்களுக்கு விருப்பமில்லை. தமிழ் மக்கள் ரணிலுக்கு எதிர்ப்பு வெளியிட்டுவரும் நிலையில் சர்வதேசசமூகத்தின் முன்பாக அப்பட்டமாக பொய்யுரைத்துரைக்கின்றார், என்றார்.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image