ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை இலங்கையில் நிறுவுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் அலெக் யஸ்ரவோவ்விடம் இந்தப் யோசனையை முன்வைத்தார்.
தனது மொஸ்கோ விஜயத்தின் போது, அமைச்சர் பந்துல குணவர்தன இந்த சந்திப்பை மேற்கொண்டார்.
மக்கள் நட்புறவு பல்கலைக்கழகம் கல்வித் துறையில் இலங்கையுடன் நீண்ட மற்றும் வலுவான உறவுகளைக் கொண்டிருப்பதுடன், 60 வருடங்களுக்கும் மேலான வரலாற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்தர மாணவர்களுக்கு கல்வி கற்பித்துள்ளதாக வேந்தர், அமைச்சரிடம் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகேயும் கலந்துகொண்டார்.
இதேவேளை, ரஷ்யாவின் ரியா நோவொஸ்டி செய்தி நிறுவனத்துடன் நேர்காணலில் பங்கேற்ற கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன, ரஷ்யாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கொள்வனவு தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடப்படும் என தெரிவித்தார். ரஷ்ய எரிபொருளை கொள்வனவு செய்வது இலங்கை எரிசக்தி அமைச்சின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்தால் பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாடு எட்டப்படலாம்.
ரஷ்ய தரப்பின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் இலங்கை தரப்பு இது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.